IPL broadcast rights: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் யாருக்கு ? - அம்பானியா, அமேசானா? வணிகப்போரில் வெல்வது யார்?
2017ஆம் ஆண்டு 163 பில்லியன் ரூபாய்க்கு ஏலம் போனநிலையில் தற்போது 600 பில்லியன் ரூபாய் (7.7 பில்லியன் டாலர்) வரை ஏலத்தொகை செல்லலாம் என எதிர்பார்ப்பு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புவது தொடர்பாக உலகப்பெரும் பணக்காரர்களான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 60 கோடி பார்வையாளர்களுடன் 6 பில்லியன் ப்ராண்ட் வேல்யுவை கொண்டுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் இருவருக்கும் இடையே அடுத்தக்கட்ட வணிக போர் மூண்டுள்ளது. வரும் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் இந்த இரண்டு பில்லியனர்கள் தரப்பும் வலுவாக மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகத்தை நிர்ணயிக்கும் இணையம்
ஐபில் போட்டிக்கான சேட்லைட் உரிமத்தை சோனி லைவ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை வால் டிஸ்ட்னி நிறுவனமும் வைத்துள்ளது. இந்த வணிகப்போட்டி குறித்து விவரிக்கும், எலாரா கேபிடல் நிறுனத்தின் ஊடக ஆய்வாளர் கரண் டவுரானி கூறுகையில், இணையதளத்தை அதிகம் பயன்படுத்தும் இந்திய நுகர்வோர்களே அடுத்த பத்து ஆண்டுகளில் சில்லறை வணிகம், வங்கி சேவைகள், பயணம் மற்றும் கல்வி சேவைகளை அதிகம் பெறுவர்கள் என்பதால் இதனை நோக்கியே ஏலம் எடுக்கவிரும்புவர்களின் கவனம் உள்ளதாக தெரிவிக்கிறார்.
அம்பானியின் டீம்
65 வயதான அம்பானி தற்போது பணிகளுக்கு மூத்த நிர்வாகிகளை அடையாளம் கண்டறிந்து பணியமர்த்துகிறார். இதில் அனில் ஜெயராஜ் மற்றும் குல்ஷன் வர்மா ஆகியோர் முக்கிய இடம் பிடித்துள்ளனர். மேலும் ரிலையன்ஸின் யுக்தி வகுக்கும் குழுவில் அம்பானிக்கு பக்கபலமாக உள்ள மனோஜ் மோடி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோரும் அம்பானிக்கு உறுதுணையாக உள்ளனர். இந்த கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஃபாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், டிஸ்னி இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் செயல்பாடுகளின் முன்னாள் தலைவரான உதய் ஷங்கரும் ரிலையன்ஸ் குழுமத்துடன் கைகோர்த்துள்ளார். அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 6 விளையாட்டு போட்டி உரிமங்களை பெற்றுள்ள நிலையில் ஐபிஎல் விளையாட்டு ஒளிபரப்பு உரிமத்தையும் பெற்றுவிட உறுதியாக உள்ளது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார்
தற்போது ஐபிஎஸ் ஸ்டீரிமிங் உரிமையை வைத்திருக்கும் டிஸ்னி நிறுவனம் இதற்காக எவ்வுளவு செலவழிக்க தயாராக உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னி தலைமையகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு பறக்கத் தொடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமான ஸ்டீமிங் சேவையை ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து டிஸ்னி வாங்கியது அந்நிறுவனத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. உலக அளவில் டிஸ்னி தனது ஸ்டீமிங் சேவை மூலம் 13.8 கோடி கட்டண சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் பங்கு மட்டும் மூன்றில் ஒரு பங்கு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ட்ரீமிங் சேவையில் தனது சகப்போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சற்று பின் தங்கிய நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், 79 லட்சம் புதிய சந்தாதாரர்களை டிஸ்னி நிறுவனம் சேர்த்துள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள். டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தனது சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
7.7 பில்லியன் டாலர் வரை ஏலம் செல்ல வாய்ப்பு
ஐபிஎல் ஒளிபரப்பு மற்றும் ஸ்டீமிங் உரிமங்களை முதன்முறையாக பிசிசிஐ தனித்தனியாக ஏலம் விட உள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளுக்காக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுவெளியிடப்பட்ட ஏலத்தில் 163 பில்லியன் ரூபாய்க்கு ஏலம் போனநிலையில் தற்போது இந்த ஏலத்தின் மதிப்பு இதை விட மூன்று மடங்கு அதிகமாகலாம் என கணிக்கப்படுகிறது. 600 பில்லியன் ரூபாய் (7.7 பில்லியன் டாலர்) வரை ஏலத்தொகை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சில்லறை வர்த்தக சந்தையில் ரிலையன்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு இடையேயான வணிகப்போட்டி அதிகரித்து வருகிறது. சமீபத்தில் உள்ளூர் சில்லறை விற்பனை நிறுவனமான ப்யூச்சர் குழுமத்திற்காக இரு நிறுவனங்களும் சட்டரீதியான போராட்டங்களை மேற்கொண்டன. இதனை தொடர்ந்து கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதற்கான போட்டி இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது.