T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC 2026: பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு 212 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், 140 ரன்களுக்குள் இலங்கையை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும்.

டி20 உலகக்கோப்பை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அரையிறுதிக்குச் செல்ல கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதி வருகிறது.
அதிரடி தொடக்கம்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பல்லேகேலேவில் கடந்த போட்டிகளில் சுழல் தாக்குதல் நடத்திய இலங்கை அதற்காக பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு என்பதால் தொடக்க வீரர் ஃபர்ஹான் - பக்கர் ஜமான் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினர்.
ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் பவர்ப்ளேவில் ஆடினார்கள். மதுசங்கா, சமீரா, தீக்ஷனா, சனகா, வெல்லலகே என யார் வீசினாலும் இருவரும் அதிரடியாக ஆடினார்கள். பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி இவர்களின் ரன்ரேட்டை எகிற வைத்தனர்.
ஃபர்ஹான் சதம்:
அபாரமாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். அபாரமாக ஆடிய இந்த ஜோடியை சமீரா பிரித்தார். 15.5 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தபோது சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமீரா அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 84 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த கவாஜா நஃபே 2 ரன்னில் அவுட்டாக, ஷதாப் கான் 7 ரன்னில் அவுட்டானார். ஆனாலும், மறுமுனையில் பட்டாசாய் வெடித்த தொடக்க வீரர் ஃபர்ஹான் சதம் விளாசினார். அவர் 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 100 ரன்கள் விளாசினார்.
கடைசி கட்டத்தில் ஃபர்ஹானுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். கடைசியாக ஃபர்ஹான் 100 ரன்களிலே கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 230 ரன்களை கடக்க வேண்டிய அவர்களது ரன்வேட்டை கட்டுக்குள் வந்தது. சமீரா 4 ஓவர்களில் 48 ரன்களையும், தீக்ஷனா 4 ஓவர்களில் 35 ரன்களையும், கேப்டன் சனகா 4 ஓவர்களில் 42 ரன்களையும், வெல்லலகே 3 ஓவர்களில் 37 ரன்களையும் வாரி வழங்கினர்.
இந்த போட்டியில் பிரம்மாண்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டி கிடைக்கும் என்பதால் பாகிஸ்தான் அதிரடியாக பேட் செய்தது. அதேசமயம், மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் இலங்கையின் அசலங்கா, நிசங்கா, சனகா, கமிந்து போன்ற வீரர்களும் பதிலடி தர தயாராக இருப்பார்கள் என்பதால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கையிலே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு அடங்கியுள்ளது.
கடைசியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் இலங்கை அணியை 147 ரன்களுக்குள் அவுட்டாக்கி வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குச் சென்றுவிடும்.




















