T20 WC PAK vs SL: போச்சே! பாகிஸ்தான் தலையில் மண்ணைப் போட்ட இலங்கை! நாக் அவுட்டில் ஹார்ட் ப்ரேக்!
டி20 உலகக்கோப்பையில் 147 ரன்களுக்குள் இலங்கையை பாகிஸ்தான் அணி கட்டுப்படுத்த தவறியதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

டி20 உலகக்கோப்பை மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்ல வேண்டிய நாக் அவுட் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதியது. பிரம்மாண்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், பாகிஸ்தான் களமிறங்கியது.
213 ரன்கள் டார்கெட்:
ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபர்ஹான் - பக்கர் ஜமான் அதிரடியாக ஆடினார். ஃபர்ஹானின் அதிரடி சதம், பக்கர் ஜமானின் அதிரடி அரைசதத்தால் இலங்கைக்கு பாகிஸ்தான் 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனாலும், ரன் ரேட் சிறப்பாக இருந்தால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில், 147 ரன்களுக்குள் இலங்கையை கட்டுப்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு சாத்தியம் என்ற நெருக்கடியுடன் பாகிஸ்தான் பந்துவீசியது.
அசத்தலாக ஆரம்பித்த பாகிஸ்தான்:
ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு நிசங்கா 3 ரன்னிலே அவுட்டாக, கமீல் மிஷ்ரா அதிரடியாக ஆடினார். மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்க அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக், முகமது நவாஸை பயன்படுத்தினார் பாகிஸ்தான் கேப்டன். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.
அப்ரார் அகமது சுழலில் அதிரடியாக ஆடிய கமீல் மிஷ்ரா 15 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டாக, அசலங்கா 18 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து அப்ரார் அகமது சுழலில் அவுட்டானார்.
விக்கெட்டுகளை இழந்த இலங்கை:
ரத்னநாயகே மட்டும் தனி ஆளாக போராடினார். கமிந்து மெண்டிஸ் 3 ரன்னிலும், லியநாகே 3 ரன்னிலும் அவுட்டாக 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. பாகிஸ்தானின் வெற்றி ஏறத்தாழ உறுதியானாலும். 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் இருந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடியிலே ஆடினார்கள்.
ஆனாலும், அவர்கள் சுழலில் அசத்தினர். இலங்கை வீரர்கள் ஓரிரு ரன்களாகவே எடுத்து பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை அளித்தனர். சனகா - ரத்னநாயகே ஜோடி பாகிஸ்தானை அச்சுறுத்தியது. ரத்னநாயகே சிறப்பாக ஆடி அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அரைசதம் கடந்தார்.
தகர்ந்த அரையிறுதி கனவு:
கடைசியில் பாகிஸ்தான் அணியால் இலங்கையை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால், இமாலய இலக்கை நிர்ணயித்தும் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது. இதனால், நியூசிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவைத் தகர்த்த ரத்னநாயகே 37 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும், கேப்டன் சனகா தொடர்ந்து அதிரடி காட்டினார். இதனால், கடைசி 6 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது.
போராடி தோற்ற இலங்கை:
ஷாகின் அப்ரிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி சனகா விளாசினார். அடுத்த பந்தை அவர் சிக்ஸருக்கு விளாச, அடுத்த பந்தையும் அவர் சிக்ஸருக்கு விளாச கடைசி 3 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே இலங்கைக்கு தேவைப்பட்டது. 4வது பந்தையும் அவர் சிக்ஸருக்கு விளாச, கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் இலங்கை வெற்றிக்குத் தேவைப்பட்டது. 5வது பந்தை அவர் டாட் பாலாக வீச, 1 பந்திற்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி பந்தை ஷாகின் அப்ரிடி டாட் பாலாக வீசி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.




















