காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மக திருவூரல் பெருவிழா! நாளை என்ன நடக்கப்போகிறது?
"46 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் பெருவிழா நடைபெற உள்ளது."

"காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், 46 ஆண்டுகளுக்குப் பிறகு திருவூரல் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது."
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
கோயில்கள் நிறைந்த நகரமாக, காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. அந்த வகையில், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. ஏகாம்பரநாதர் கோயில் பஞ்சபூதங்களில் நிலத்திற்குரிய கடவுளாக பார்க்கப்படுகிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாசி மக, திருவூரல் பெருவிழா 46 ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ள.
திருவூரல் பெருவிழா
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், மாசி மாதம் மக நட்சத்திர தினத்தன்று, திருவண்ணாமலை மாவட்டம் அரசங்குப்பம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், எழுந்தருளி மாசி மக திருவூரல் பெருவிழா நடைபெற்று வந்துள்ளது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு மாசி மக, திருவூரல் பெருவிழா நடைபெற்றுள்ளது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், மாசி மக திருவூரல் பெருவிழா நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீண்டும் 46 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு மாசி மக நட்சத்திரத்தன்று, திருவூரல் பெருவிழா நாளை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவிழாவின் முக்கிய அம்சங்கள் என்ன ?
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் நாளை காலை 5 மணிக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து புறப்படுவார். மதியம் 1 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஒழுக்கவாக்கம் கிராமத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், தீப ஆராதனை நடைபெறும்.
அதன் பிறகு மதியம் 2 மணிக்கு செட்டித்தாங்கல், தேரடி புளியமரம் அருகில் தீபாரதனை நடைபெறும். மாலை 3 மணிக்கு அரசங்குப்பம் கோயிலில் மண்டகப்படி மற்றும் தீப ஆராதனை நடைபெறும். இதனை தொடர்ந்து நள்ளிரவு 11 மணி அளவில், அரசங்குப்பம் பாலாற்றில் திருவூரல் பெருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த பெருவிழா நடைபெற உள்ளதால், காஞ்சிபுரம் பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






















