Women’s T20 WC: டி20 உலகக்கோப்பை தொடர்: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய மகளிர் படை? அயர்லாந்துடன் இன்று மோதல்..!
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது. 26 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. விதிகளின்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
இதேபோல பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் இந்த தொடருக்கான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இதன்மூலம் 2 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இதனால் அரையிறுதிக்கு செல்ல ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தோற்றால், இந்தியா - பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அதேசமயம் ஏற்கனவே 3 ஆட்டங்களிலும் தோற்றதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து, இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதுவரை ஒருமுறை மோதியுள்ளன. 2018 ஆம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.