SAvsIND : டிராவிட்,கோலி,வாண்டரர்ஸ்... லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான காம்போ !
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோஹனஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மைதானம் எப்போது இந்தியாவிற்கு மிகவும் ராசியான மைதானம். இந்த மைதானத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் என்னென்ன? இது ஏன் விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட்டிற்கு ராசியான மைதானம் தெரியுமா?
இந்தியாவும் வாண்டரர்ஸ் மைதானமும்:
இந்திய கிரிக்கெட் அணி இதுவரை வாண்டரர்ஸ் மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் 2 முறை வெற்றியும், 3 முறை டிராவும் செய்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை தோல்வி அடைந்ததே இல்லை. 2018-ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆகவே இது எப்போதும் இந்தியாவிற்கு ராசியான மைதானமாக அமைந்துள்ளது.
டிராவிட்டும் வாண்டரர்ஸ் மைதானமும்:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் இந்த மைதானம் மிகவும் ராசியான ஒன்று. ஏனென்றால் 1997-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் முறையாக தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் செய்தார். அப்போது 3ஆவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் இந்திய 100/3 என தவித்து கொண்டிருந்த போது டிராவிட் மற்றும் கங்குலி ஜோடி சேர்ந்து இந்திய அணி சரிவில் இருந்து மீட்டது. அத்துடன் ராகுல் டிராவிட் 148 ரன்கள் விளாசி அசத்தினார்.
அதன்பின்னர் 2006-ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்தது. அப்போது முதல் டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 84 ரன்களுக்கு சுருட்டியது. அத்துடன் இந்தப் போட்டியை 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இது தான் தென்னாப்பிரிக்க மண்னில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகும்.
விராட் கோலியும் வாண்டரர்ஸ் மைதானமும்:
இந்திய கிரிக்கெட் அணி 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்தது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோரின் அபார பந்துவீச்சால் இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 54 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்களும் எடுத்து அசத்தினார். கேப்டன் விராட் கோலியும் இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெற்றுள்ளார். ஆகவே அவருக்கும் இந்த மைதானம் மிகவும் ராசியானதாக உள்ளது.
இப்படி இருக்கும் நாளை தொடங்கும் போட்டியில் கேப்டனாக விராட் கோலியும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் உள்ளனர். எனவே இவர்களின் ராசி மீண்டும் தொடரும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். ஏனென்றால் இதற்கு முன்பாக சென்ற 7 முறையும் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி தொடரை இழந்துள்ளது. இதன்காரணமாக இம்முறை முதல் டெஸ்ட் போட்டியில் வென்றுள்ள இந்திய அணிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 2022ல் எங்கெல்லாம் போட்டி... வெளியானது இந்திய அணியின் முழு பட்டியல் விபரம்...!