Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த சகோதரர் - கைது செய்து சிறையிலடைத்த போலீசார்
Hardik Pandya: கிரிக்கெட் வீரர்களான பாண்ட்யா சகோதரர்களிடம், உறவினர் ஒருவரே, ரூ.4.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Hardik Pandya: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த, அவரது சகோதரரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாண்ட்யா சகோதரர்களிடம் மோசடி:
குடும்ப உறவினரும் சகோதரர் முறையையும் சேர்ந்த 37 வயதான வைபவ் பாண்ட்யா, கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவர்ரிடம் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் உள்ள பாண்ட்யா சகோதரர்களின் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் இருந்து, சுமார் ரூ. 4.3 கோடியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு விவரம் என்ன?
ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா மற்றும் வைபவ் பாண்ட்யா ஆகியோர் இணைந்து, கடந்த 2021ம் ஆண்டு பாலிமர் தொழிலை தொடங்கினர். க்ருணால் பாண்ட்யா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர், மூலதனத்திற்கான தலா 40 சதவீத முதலீட்டை வழங்கியுள்ளனர். வைபவ் பாண்ட்யா 20 சதவீத மூலதனத்திற்கு பங்களித்ததோடு, நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கையாளுவார் என ஒப்பந்த ஆகியுள்ளது. நிறுவனத்தின் லாபம் மூலதன முதலீட்டிற்கு ஏற்ப மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டது. தொழில் நல்லபடியாக நடந்து கொண்டிருந்த வேளையில், வைபவ் பாண்ட்யா பாலிமர் தொழிலில் இன்னொரு நிறுவனத்தை நிறுவினார். மற்ற இரண்டு சக முதலீட்டாளர்களுக்கும் இதுதொடர்பாக அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இரண்டு நிறுவனங்களை ஒரே நேரத்தில் வைத்திருந்தன் மூலம், முதல் நிறுவனத்தின் லாபம் சரிந்தது. இதனால், மூன்று கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாண்ட்யா சகோதரர்களுக்கு மிரட்டல்:
அதேநேரம், வைபவ் பாண்ட்யா ரகசியமாக தனக்கான லாபத்தை ரகசியமாக அதிகரித்துக் கொண்டுள்ளார். அதன்படி, தனது லாபத்தை 20 சதவிகிதத்திலிருந்து 33.3 சதவிகிதமாக உயர்த்திக் கொண்டார். இதனால் ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா ஆகியோர் பெரும் இழப்பை சந்தித்தனர். இதனிடையே, வைபவ் பாண்ட்யா பார்ட்னர்ஷிப் நிறுவனத்தின் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்து தனது சொந்த கணக்கில் செலுத்தியுள்ளார். இந்த மோசடி விவகாரம் ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யாவிற்கும் தெரியவந்துள்ளது. இதொடர்பாக விசாரித்தபோது, உங்கள் மீது அவதூறு பரப்புவேன் என பாண்ட்யா சகோதரர்களை வைபவ் மிரட்டியுள்ளார். இந்நிலையில் தான், புகாரின் அடிப்படையில் அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாண்ட்யா சகோதரர்கள் பின்புலம்:
பாண்ட்யா சகோதரர்கள் ஏழ்மையான குடும்ப பின்புலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 2015ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவும், 2016ம் ஆண்டு க்ருணால் பாண்ட்யாவும், மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் அறிமுகமாகினர். அதைதொடர்ந்து, இந்திய அணிக்காகவும் விளையாட தொடங்கினர். ஐபிஎல் தொடர், விளம்பரங்கள் மூலம் தற்போது பாண்ட்யா சகோதரர்கள் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.