IND vs AUS Final 2023: கெத்து காட்டப்போகும் வீரர்கள் யார்? - இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்..!
India vs Australia World Cup Final 2023: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நட்சட்திர வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
India vs Australia World Cup Final 2023: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜாம்பா ஆகியோர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி:
இந்தியாவில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டிகளை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்திய அணி 3வது முறையாகவும், ஆஸ்திரேலியா அணி 6வது முறையாகவும் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள, இறுதிப்போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் இரு அணிகளிலும் உள்ளனர்.
தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர்கள்:
உலகத் தரம் வாய்ந்த இந்த அணிகளில், தனி நபராக போட்டியின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்ட, நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக ரோகித், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ஷமி ஆகியோர் இந்தியா சார்பிலும், ஸ்டார்க், ஜாம்பா, மேக்ஸ்வெல் மற்றும் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியா சார்பிலும் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படக் கூடும். அந்த வகையில், நட்சத்திர வீரர்களுக்கு இடையேயான இன்றைய மோதல் எப்படி அமையும் என்பத விரிவாக அலசலாம்.
ரோகித் Vs ஸ்டார்க்:
பவர்பிளேயில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டம், போட்டியில் இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க உதவுகிறது. ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையில் முதல் 10 ஓவர்களில் 133.08 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 88.50 என்ற சராசரியுடன் ரன்களை குவித்து வருகிறார். அதேநேரம், மிட்செல் ஸ்டார்க்கின் இடது கை வேகப்பந்து வீச்சு, ரோகித்திற்கு ஆபத்தாக அமையலாம். இந்த உலகக் கோப்பையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் இரண்டு முறை அவர் ஆட்டமிழந்துள்ளார். அதேநேரம், இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த உலகக் கோப்பையில் ஸ்ட்ரைக் ரேட்டாக 135-ஐ கொண்டுள்ளார் . ஸ்டார்க் பவர்பிளேயில் ஓவருக்கு சராசரியாக ஐந்து ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
கோலி Vs ஹேசல்வுட்:
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரின் முதுகெலும்பாக உள்ள கோலிக்கு, ஹேசல்வுட்டின் துல்லியமான லைன் மற்றும் லெந்த் அச்சுறுத்தலாக அமையலாம். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், ஒருநாள் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் கோலியை எதிர்கொண்டு ஐந்து முறை அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஹேசில்வுட்டுக்கு எதிராக கோஹ்லி 88 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளார். சென்னையில் நடந்த லீக்-சுற்று போட்டியிலும், கோலிக்கு எதிராக ஹேசல்வுட் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் அந்த போட்டியில் கோலி 80 ரன்களுக்கு மேல் சேர்த்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஸ்ரேயாஸ்/ ராகுல் Vs ஜாம்பா:
இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் மற்றும் கே. எல். ராகுல் உடன், ஆஸ்திரேலியா சார்பில் நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்துள்ள ஜாம்பாவின் மோதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், ஜாம்பா 10 ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜம்பா ஏழு இன்னிங்ஸ்களில் ஸ்ரேயாஸை இரண்டு முறையும் 11 இன்னிங்ஸில் நான்கு முறை ராகுலையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு Vs ஆஸ்திரேலிய டாப்-ஆர்டர்:
நடப்பு உலகக் கோப்பையில் பவர்பிளேயில் அதிவேகமாக ரன் சேர்க்கும் இரண்டாவது அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. எனவே தொடக்க ஓவர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை எப்படி கையாளப்போகின்றனர் என்பது முக்கியமானது. இந்தியா முதல் 10 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. வார்னரை ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா ஒருமுறை கூட ஆட்டமிழக்கச் செய்ததில்லை. அதேநேரம், முகமது ஷமி, 10 இன்னிங்ஸ்களில் மூன்று முறை வார்னரை அவுட்டாக்கியுள்ளார். பும்ரா - ஷமி - சிராஜின் செயல்பாடு ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய சுழற்பந்து வீச்சு Vs ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர்:
சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா முக்கிய பங்காற்றினர். ஆஸ்திரேலிய மிடில் ஆர்டரை ஆட்டம் காண செய்த அந்த கூட்டணி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது. ரவீந்திர ஜடேஜா ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகிய இருவரையும் நீக்கினார். வார்னர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரை குல்தீப் வெளியேற்றினார். தென்னாப்ரிக்காவின் சுழற்பந்து வீச்சையே சமாளிக்க முடியாமல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதனால், இன்றைய போட்டியில் குல்தீப் - ஜடேஜா கூட்டணி ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.