ICC Champions Trophy: நாங்க பாகிஸ்தானுக்கு வரல; இதுவேனா ஓகே: ஐடியா கொடுக்கும் பிசிசிஐ! ஏற்குமா ஐசிசி?
ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என தகவல் வெளியாகியுள்ளது.
ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தானில் இருந்து, வேறு இடத்திற்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025:
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதைதொடர்ந்து அடுத்து ஆண்டு ஐசிசி சார்பில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில், முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி போட்டி 50 ஒருநாள் வடிவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும், சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் செல்ல விரும்பாத இந்திய அணி?
இதனிடையே, சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்ல இந்திய அணி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்திய தூதரை திருப்பி அனுப்பியது உட்பட, 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தூதரக உறவைக் குறைக்கும் பாகிஸ்தானின் முடிவுகள், இந்திய அணி அங்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கின்றன. இதுதொடர்பாக பேசும் மத்திய அரசு அதிகாரிகள், “தீவிரவாதத்திற்கு எதிரான அவர்களின் நிலைப்பாடு, சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு உகந்த சூழல் அங்கு இல்லை என்பதை அறிவுறுத்துகிறது, பாகிஸ்தானுக்கான பயணம் என்பது வெகு தொலைவில் உள்ளது” என குறிப்பிடுகின்றனர்.
Indian Cricket team is unlikely to travel to Pakistan for the 2025 ICC Champions Trophy. BCCI will ask ICC to host matches in Dubai or Sri Lanka: BCCI sources to ANI pic.twitter.com/o7INJKhk1E
— ANI (@ANI) July 11, 2024
மாற்று இடங்களை பரிந்துரைக்கும் பிசிசிஐ:
1996ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு ஐசிசி போட்டிகளையும் பாகிஸ்தான் நடத்தியது இல்லை. 2017ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. ஆனால், போட்டியின் சில ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அல்லது இலங்கையில் நடைபெற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. ANI வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்ல வாய்ப்பில்லை. பிசிசிஐ வட்டாரங்களின்படி, போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பிசிசிஐ கோர உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்:
முன்னதாக, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டி முற்றிலும் பாகிஸ்தானில் நடத்தவே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு செல்ல இந்திய கிரிக்கெட் சம்மேளனம் மறுப்பு தெரிவித்தது. அதனை தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின், போட்டியை ஹைப்ரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. அதன்படி, இந்தியா மட்டும் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது. ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்ற்அ மற்ற அணிகளின் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றது.