Watch Video : இலங்கை தேசிய கொடியுடன் மைதானத்தில் நின்ற கம்பீர்..! சூப்பர்ஸ்டார் அணி என புகழாரம்..!
ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணியின் தேசிய கொடியை மைதானத்தில் கம்பீர் ஏந்தி நின்ற இலங்கை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பலமிகுந்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை 6வது முறையாக கைப்பற்றி அசத்தியது.
வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, பிரபல கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய போட்டியில் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் கம்பீர் பங்கேற்றார்.
Superstar team…Truly deserving!! #CongratsSriLanka pic.twitter.com/mVshOmhzhe
— Gautam Gambhir (@GautamGambhir) September 11, 2022
Sir truly deserving as well destined also ..https://t.co/cU1OmU3Vao
— AstroCounselKK🇮🇳 (@AstroCounselKK) September 11, 2022
போட்டி முடிந்த பிறகு மைதானத்திற்கு உள்ளே சென்ற கம்பீர் இலங்கை நாட்டின் தேசிய கொடியை ஏந்தி இலங்கை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மைதானத்தின் நடுவே இலங்கை நாட்டின் தேசிய கொடியை ஏந்தி நின்ற முன்னாள் இந்திய வீரர் கம்பீரை பார்த்து இலங்கை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
கவுதம் கம்பீர் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து இலங்கை அணியை சூப்பர்ஸ்டார் அணி என்று புகழாரம் சூடியுள்ளார். கவுதம் கம்பீரின் இந்த டுவிட்டருக்கு கீழ் பலரும் கவுதம் கம்பீரை பாராட்டியுள்ளனர். கவுதம் கம்பீர் பாராட்டியிருப்பது போல இலங்கை அணி சூப்பர்ஸ்டார் அணியாகவே இந்த தொடரில் ஆடியது.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக ஆடி ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். மேலும், நேற்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்காகவும், இலங்கை அணிக்காகவும் ஆடிய வீரர்கள் யாருக்கும் இதற்கு முன்பு ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் ஆடிய அனுபவமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் மைதானத்தில் சேசிங் செய்யும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு என்ற சூழல் நிலவி வந்த நிலையில், பாகிஸ்தான் அணியே கோப்பையை வெல்லும் என்று பலரும் கணித்த நிலையில் அனைவரின் கணிப்புகளையும் ஏமாற்றி முதலில் பேட் செய்து அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் பனுகா ராஜபக்சே 71 ரன்களையும், ஹசரங்கா அதிரடியாக ஆடி 36 ரன்களையும் குவித்ததால் இலங்கை அணி 170 ரன்களை எட்டியது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் தவிர யாருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால், அந்த அணி தடுமாறியது. மதுஷன் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை 6வது முறையாக வென்றது.
இலங்கை அணியின் வெற்றியை அந்த நாட்டு மக்கள் வீதிகளில் உலா வந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான் கம்பீரும் மைதானத்தில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி உலககோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கவுதம் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Watch Video: நீண்ட மாதங்களுக்கு பிறகு புன்னகை..! ஆசிய கோப்பை வென்ற மகிழ்ச்சியில் வீதிகளில் கொண்டாடித் தீர்த்த இலங்கை மக்கள்..!
மேலும் படிக்க : PAK vs SL Asia Cup Final : சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை...! மிரட்டல் பவுலிங்..! பாகிஸ்தானை சுருட்டி அபார வெற்றி..!