Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி தான் காரணம் எனக் கூறி வெளியான பிரபல அமெரிக்க பத்திரிகையின் அறிக்கையை, அவ்விபத்தின் விசாரணையை மேற்கொண்டுள்ள ஏஏஐபி மறுத்துள்ளது.

அகமதாபாத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்திற்கு, அந்த விமானத்தின் விமானி தான் காரணம் என்ற குற்றச்சாட்டுடன், பிரபல அமெரிக்க ஊடகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் விமான விபத்து விசாரணை அமைப்பு(AAIB) அதை மறுத்துள்ளது.
பிரபல அமெரிக்க இதழில் விமானியை குற்றம்சாட்டி வெளியான அறிக்கை
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து, சர்வதேச அளவில் பேசுபொருளான நிலையில், அவ்விபத்து குறித்து இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், பிரபல அமெரிக்க ஒன்று, அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுளை கேப்டன் அணைத்ததாக சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகை அறிக்கைக்கு ஏஏஐபி மறுப்பு
இதைத் தொடர்ந்து, அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கம் விதமாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விசாரணை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகாந்தர், விசாரணை செயல்முறையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முழுமையற்ற விளக்கங்களை பரப்புவதை தவிர்க்குமாறு, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஏஏஐபி-ன் இறுதி அறிக்கை மட்டுமே விபத்திற்கான மூல காரணங்களை வெளிப்படுத்தும என்றும், அதனால், விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இந்திய விமானிகள் கூட்டமைப்பு கண்டனம்
அகமதாபாத் விமான விபத்திற்கு விமானியை குற்றம்சாட்டி அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரைக்கு, விமானிகள் சங்கமான இந்திய விமானிகள் கூட்டமைப்பு, அமெரிக்க பத்திரிகை விமானியை குறை கூற முயற்சிப்பதாக அறிக்கை மீது குற்றம் சாட்டியுள்ளது.
ஏஏஐபி-ன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, எந்த விமானியையும் குறை கூறவில்லை என்பதை இந்திய விமானிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏஏஐபி-ன் முதற்கட்ட அறிக்கை கூறியுள்ளது என்ன.?
கடந்த மாதம் 12-ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ரக விமானம், கிளம்பிய 2 நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்துச் சிதறி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தமாக 270 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விமான விபத்து தொடர்பாக, விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி-ன் சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் முதற்கட்ட அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில், விபத்திற்குள்ளான விமானத்தில் இரு எஞ்சின்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும், ஒரே நேரத்தில் சுவிட் ஆஃப், அதாவது ‘ரன்‘ என்ற நிலையிலிருந்து ‘கட் ஆஃப்‘ என்ற நிலைக்கு மாறியதாலேயே விமானம் திடீரென உயரத்தை இழந்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடைசியாக விமானிகள் பேசிய தரவுகள், அதாவது காக்பிட் குரல பதிவு, கருப்புப் பெட்டியிலிருந்து மீட்கப்பட்டதில், விமானி ஒருவர், ஏன் கட் ஆஃப் செய்தீர்கள்.? என்று மற்றவரிடம் கேட்ட நிலையில், அதற்கு அந்த மற்றொரு விமானி, நான் செய்யவில்லை என பதிலளித்ததாக, ஏஏஐபி-ன் 15 பக்க முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏஏஐபி-ன் இந்த அறிக்கையை வைத்துதான் சர்வதேச அளவில், விபத்திற்கு விமானி தான் காரணம் என குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.




















