Untold Stories 6 : முதல் ஹாட்ரிக்..! முதல் அர்ஜூனா விருது..! மறக்கப்பட்ட இந்திய மகளிர் கால்பந்தின் ரியல் சிங்கப்பெண் சாந்தி முல்லிக்...!
விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக காணலாம்.
கொல்கத்தாவில் உள்ள ரபீந்த்ரா சரோபர் மைதானத்தில் தினமும் 5 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பயிற்சி அளித்து வருகிறார். இதற்காக, அவர் ஒவ்வொரு மாணவரிடமும் ரூபாய் 100தான் கட்டணமாக வசூலிக்கிறார். அந்த கட்டணமும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கால்பந்து வாங்குவதற்காகவே. இந்த வயதிலும் கால்பந்து பயிற்சியை, குறைந்த தொகைக்கு அளித்து வரும் அந்த பெண்மணி, இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சாந்தி முல்லிக்.
சாந்தி முல்லிக்கின் தந்தை ஒரு ராணுவ வீரர். அவரும் ஒரு கால்பந்து வீரர். சிறுவயதிலே கால்பந்தின் மீது ஆர்வம் கொண்ட சாந்தி முல்லிக், தானும் கால்பந்து வீராங்கனையாக ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது ஆசைக்கு அவரது அப்பாவும், அம்மாவும் துணையாக நிற்க, உறவினர்களோ தடையாக நின்றுள்ளனர். பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்றால் அவர்கள் கருத்தரிப்பதற்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று கூறியுள்ளனர். ஆனால், சாந்தி முல்லிக்கின் தந்தையோ வீடுகளிலே கடினமான வேலைகளைச் செய்யும் பெண்களால் மைதானத்தில் விளையாட முடியாதா? என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் 1970ம் ஆண்டுகளுக்கு பின்னரே மகளிர் கால்பந்து போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, மகளிர் கால்பந்திற்கு என்று போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த சிரமங்களுக்கு இடையிலும் முதல் மகளிர் ஆசிய கால்பந்து கோப்பைத் தொடர் நடத்தப்பட்டது. இந்திய மகளிர் கால்பந்து கூட்டமைப்புச் செய்த இந்த தொடரை சர்வதேச கால்பந்து அமைப்பான பிபா அங்கீகரிக்கவில்லை.
சாந்தி முல்லிக் ஆடிய காலகட்டம் இந்திய மகளிர் கால்பந்து அணியின் பொற்காலம் என்றே கூற வேண்டும். அந்த காலகட்டத்தில் இந்திய மகளிர் கால்பந்து அணி நல்ல வளர்ச்சி அடைந்திருந்தது. சாந்தி முல்லிக்கின் அபார திறமையால் அவர் இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக உயர்ந்தார்.
இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு சாந்தி முல்லிக் 1981-83 காலகட்டத்திற்கு கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்த காலகட்டத்தில் இந்திய மகளிர் கால்பந்து அணி ஆசிய கோப்பை உள்ளிட்ட பல சர்வதேச தொடர்களில் பங்கேற்றது. சாந்தி முல்லிக்குடன் சுக்லா தத்தா, குன்டலா கோஷ், தஸ்திடர் ஆகியோரும் ஆசியன் ஆல் ஸ்டார் அணியில் இடம்பெற்றிருந்தனர். சாந்தி முல்லிக் வீரராக விளையாடி 1979 மற்றும் கேப்டனாக ஆடிய 1983 காலகட்டத்தில் இந்திய அணி ஆசிய கோப்பை கால்பந்தில் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆனால், இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் இருந்து எந்த பாராட்டும், வரவேற்பும் கிடைக்கவில்லை.
அவர்கள் ஆடிய காலகட்டத்தில் மகளிர் கால்பந்து அணிக்கு முறையான ஆடைகள், பயிற்சி முகாம், பயிற்சி உபகரணங்கள் எதுவுமே முறையாக வழங்கப்படவில்லை. ஆனாலும், சாந்தி முல்லிக் உள்ளிட்ட வீராங்கனைகள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தவறியதே இல்லை.
இந்திய அணியின் கேப்டனாக மகுடம் பதித்த சாந்தி முல்லர், இந்திய கால்பந்து அணிக்காக 1981ம் ஆண்டு சிங்கப்பூர் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இந்திய மகளிர் அணிக்காக முதன்முதலில் ஹாட்ரிக் கோல் அடித்த வீராங்கனை என்ற அரிய சாதனையையும் படைத்தார். கடினமான காலகட்டத்தில் எந்தவொரு பெரிய உதவியும் இல்லாமல் இந்திய கால்பந்து அணிக்காக சிறப்பான பங்காற்றிய இவருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்துள்ளது. அர்ஜூனா விருது பெற்ற முதல் மகளிர் கால்பந்து வீராங்கனை சாந்தி முல்லிக் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் தற்போது மிகவும் சிறிய அளவில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் சாந்தி முல்லிக் தனது நண்பரும், பிரபலமாக கால்பந்து வீரருமான அம்ரித்லால் சக்ரோபதி உதவியுடன் பல குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கால்பந்தின் மீது தீராத மோகம் கொண்டதால் சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் சாந்தி முல்லிக், தன்னை சிறப்பு விருந்தினராக அளிக்கும் இடங்களில் கூட தனக்கு பரிசுப்பொருட்களாக கால்பந்தையே வழங்குமாறு அன்புடன் கேட்கிறார். அந்த பந்துகள் மூலமாக தனது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
அர்ஜூனா விருது வென்ற இந்திய மகளிர் கேப்டன், முதல் ஹாட்ரிக் கோல் இந்திய மகளிர் அணிக்காக என்ற பல சாதனைகளைப் படைத்த சாந்தி முல்லிக்கின் ஆசை தற்போதைய இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு போதியளவு வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.
மீண்டும் அடுத்த வாரம் அன்டோல்ட் ஸ்டோரியில் மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல்களுடன் சந்திக்கலாம்.
மேலும் படிக்க : untold stories 5 : “ரெண்டு கை இல்லன்னாலும் கிரிக்கெட் ஆடுவேன் சாரே..” - அசத்தும் பாரா கிரிக்கெட்டின் கேப்டன்..!
மேலும் படிக்க : Untold Stories 4 | நாட்டிற்காக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள்..! வறுமையுடன் போராடி உயிரிழந்த இந்திய ஹாக்கி கேப்டனின் வரலாறு..