untold stories 5 : “ரெண்டு கை இல்லன்னாலும் கிரிக்கெட் ஆடுவேன் சாரே..” - அசத்தும் பாரா கிரிக்கெட்டின் கேப்டன்..!
விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக காணலாம்.
உங்களுக்கு இரண்டு கைகளும் இல்லை. ஆனால், பேட்டிங் செய்ய வேண்டும். பந்துவீச வேண்டும். பீல்டிங் செய்ய வேண்டும். கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்றால் உங்களால் முடியுமா? ஆனால், முடியும் என்று சாதித்தது மட்டுமின்றி ஒரு மாநிலத்தின் கிரிக்கெட் அணிக்கே கேப்டனாகவும் மாறியிருக்கிறார் ஒரு இளைஞர். அந்த சாதனைக்கு சொந்தக்காரர் அமீர் ஹூசைன் லோன்.
சரியாக 1997ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி எட்டே வயது நிரம்பிய அமீர் ஹூசைனின் தாயார் அவர்களுக்கு சொந்தமாக இயங்கி வந்த அரவை மில்லிற்கு சென்று கோதுமையை கொடுக்குமாறு அனுப்பியுள்ளார். மதிய நேரம் என்பதால் அந்த அரவை மில்லின் உரிமையாளரான அமீரின் தந்தையும், அமீரன் அண்ணனும் மற்ற தொழிலாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அரவை இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, அரவை இயந்திரம் அருகே சென்ற அமீரின் ஆடைகள் அந்த இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், இயந்திரத்தில் சிக்கிய அமீரின் கைகள் மிகவும் கடுமையாக சேதம் அடைந்தது. இதைக்கண்டு துடிதுடித்து போன அமீரின் தந்தையும், அமீரின் அண்ணனும், சக தொழிலாளர்களும், சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ மீட்பு குழுவினரும் உடனடியாக அமீரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அமீரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் அமீரின் இரண்டு கைகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டனர்.
அமீரின் சிகிச்சைக்காக அவரது தந்தை அந்த அரவை மில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எட்டு வயதிலே இரண்டு கைகளையும் இழந்த சிறுவன் அமீர் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மிகவும் தடுமாறியுள்ளான். அனைத்திற்கும் யாராவது உதவ வேண்டும் என்ற பரிதாப நிலைக்கு ஆளாகினான். ஆனாலும், அவனது பாட்டி பஷீ அவனுக்கு உறுதுணையாக நின்றார்.
கைகளை இழந்த சிறுவனாக பள்ளிக்கு சென்ற அமீரை, ஒரு ஆசிரியர் மட்டும் தொடர்ந்து புறக்கணித்தார். அமீர் பள்ளிக்கு வருவதே அர்த்தமற்றது என்று நினைத்தார். ஆனாலும், அந்த ஆசிரியருடன் போராடி அமீரின் பள்ளி வாழ்க்கையை தொடர அவரது பாட்டி துணைநின்றார். ஆனாலும், அவர் மறைவிற்கு பிறகு அமீர் தடுமாறத் தொடங்கினார். பின்னர், முகத்தை சவரம் செய்வது உள்ளிட்ட தனக்கான வேலைகளை கால்களை கொண்டு தானே செய்ய படிப்படியாக கற்கத்தொடங்கினார்.
சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்ட அமீர், காஷ்மீர் நகரில் உள்ள அனந்த்நக்கின் பிஜ்பெஹ்ராவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்கிறார். அங்கு முதலாம் ஆண்டு இவரது கிரிக்கெட் ஆர்வத்தையும், திறனையும் கண்ட பேராசிரியர் ஒருவர் பாரா கிரிக்கெட்டில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இரண்டு கைகளும் இல்லாமல் களத்திற்குள் இறங்கிய அமீருக்கு தொடக்கத்தில் கிரிக்கெட் மிகவும் சோதித்தது. ஆனாலும், அமீர் விடாமுயற்சியுடன் தீவிர பயிற்சி செய்தார். நீண்ட பயிற்சிக்கு பிறகு கழுத்தையும், தோள்பட்டையும் பயன்படுத்தி பேட்டை எவ்வாறு இறுக்கமாக பிடித்து பேட்டிங் செய்வது என்று கற்றுக்கொண்டார். பின்னர், தனது கால்களிலே பந்தை பிடித்து எப்படி பந்துவீசுவது என்பதையும் கற்றுக்கொண்டார். அவரது திறமையை கண்டு வியந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் நிர்வாகம் அவரை 2013ம் ஆண்டு ஜம்மு –காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணி கேப்டனாக நியமித்தது.
இந்தியாவின் பிற மாநிலங்களிலே பாரா விளையாட்டு போட்டிகளுக்கு முறையான அங்கீகாரமும், ஊக்கத்தொகையும் கிடைக்காத நிலையில் காஷ்மீரில் நிலைமையை சொல்லத் தேவையில்லை. காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரே கிடையாது. இதனால், அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டார் அமீர். இதுவரை அமீர் மட்டுமே 100க்கும் மேற்பட்ட பாரா கிரிக்கெட் வீரர்களுக்கு காஷ்மீரில் பயிற்சி அளித்துள்ளார்.
இவரது திறமையால் இந்திய பாரா கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து ஆடியுள்ளார். டெல்லி, லக்னோ, கேரளா, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரா கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்காக ஆடியுள்ளார். அவரது அபார திறமையால் ஐக்கிய அரபு எமிரேட்சின் மாற்றுத்திறனாளிகளுக்கான துபாய் பிரிமீயர் லீக் போட்டியிலும் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல இளைஞர்களுக்கும் அமீர்ஹூசைன் லோன் ரோல் மாடலாகவும், வழிகாட்டியாகவும், ஆசானாக திகழ்ந்து வருகிறார். இவரது பகுதியில் இருந்துதான் பர்வேஸ் ரசூல் என்ற கிரிக்கெட் வீரர் ஐ.பி.எல். தொடரில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதன் சாதிப்பதற்கு உடலில் உள்ள குறைபாடு ஒரு தடையே இல்லை என்பதற்கு மற்றுமொரு மகுடமான உதாரணம்தான் அமீர்ஹூசைனின் வாழ்க்கை.
மீண்டும் அடுத்த வாரம் வேறு ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்வுடன் சந்திக்கலாம்.
மேலும் படிக்க : Untold Stories 4 | நாட்டிற்காக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள்..! வறுமையுடன் போராடி உயிரிழந்த இந்திய ஹாக்கி கேப்டனின் வரலாறு..
மேலும் படிக்க : Untold Story 2: மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள்.! முதல் அர்ஜூனா விருது..! சுட்டுக்கொல்லப்பட்ட ஹாக்கி ஜாம்பவான் கதை!