தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா தொடக்கம்; அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா
இன்று மாலை 5 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு திருமுறை ஒப்புவித்தல் போட்டியும், இரவு 7.30 மணிக்கு அப்பர் பெருமான் வழிபாடும், பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-வது ஆண்டாக அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் சுவாமி வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
களிமேட்டில் அப்பர் சுவாமிக்கு மடம்
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் சமய குறவரான அப்பர் சுவாமிக்கு மடம் அமைத்து, அவரது பிறந்தநாளை கிராம மக்கள் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த விழா மிக உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு அப்பர் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா வந்தபோது எதிர்பாராத வகையில் மின்கம்பி தேர்மீது உரசியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு பிறகு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தமிழம் முழுவதும் திருவிழா நடத்தும்போது கடைபிடிக்க உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
96ம் ஆண்டு அப்பர் சதய விழா தொடக்கம்
மேலும் தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விபத்து நிகழ்ந்த பின்னர் கடந்தாண்டு, 11 பேர் இறந்த சுவட்டின் தாக்கம் இருந்ததால், களிமேட்டில் மிக எளிமையாக அப்பர் சதயவிழா ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து களிமேடு கிராம மக்கள் சார்பிலும் அப்பர் பேரவை சார்பிலும் 96 -வது ஆண்டாக அப்பர் சதயவிழா நேற்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது.
பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்
அதன்படி களிமேடு அப்பர் மடத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின்னர் திருமுறை இசையும், 11 மணிக்கு அப்பர் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக திருமஞ்சனமும், 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.
ஆன்மீக சொற்பொழிவு
தொடர்ந்து இரவு 7 மணியளவில் கும்பகோணம் கண்ணன் அடிகளார் தலைமையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில், சென்னை குன்றத்தூர் எம்.கே.பிரபாகரமூர்த்தியின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. இதையடுத்து இரவு 8 மணிக்கு அப்பர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கிராமத்தின் தெருக்கள் வழியாக தேர் ஊர்வலமாக வந்து நிலையை அடைந்தது.
இன்று திருமுறை ஒப்புவித்தல் போட்டி
இன்று (4 -ம் தேதி) மாலை 5 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு திருமுறை ஒப்புவித்தல் போட்டியும், இரவு 7.30 மணிக்கு அப்பர் பெருமான் வழிபாடும், தஞ்சாவூர் வைதேகி ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது. நாளை (மே 5-ம் தேதி) அப்பர் சுவாமிகளுக்கு விடையாற்றி விழாவுடன் சதய விழா நிகழ்வுகள் நிறைவுபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.