கரூர் தீர்த்த மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
கரூர் தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங் கோவில் பகுதியில் தீர்த்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள், விழா கமிட்டியினர் முடிவு செய்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ரக்க்ஷா பந்தனம், திரவ்யாஹூதி பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 2 கால யாகவேள்வி பூஜைகளை நடைபெற்றது. 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
கோபுர கலசத்தை வந்தடைந்த உடன் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசத்திற்கு ஊற்றினர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் செல்வ விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கரூர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.