ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதுக்கடைக்கு விடுமுறை அறிவிப்பு - காரணம் என்ன?
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் மதுக்கடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூட உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் மதுக்கடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை மூட உத்தரவு.
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வட இந்தியாவிற்கு நிகராக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் தொடங்கிவிட்டது. குறிப்பாக, புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
மதுக்கடைகள், மதுபார்கள் மூடல்
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, நேருவீதி, காந்திவீதி, அதிதி ஓட்டல் சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை காந்திசாலையை அடைகிறது. எனவே அந்த வழியில் உள்ள மதுக்கடைகள், மதுபார்கள், மது விற்பனை செய்ய உரிமம் பெற்ற ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் வருகிற 31-ந்தேதி மூட வேண்டும். இதற்கான உத்தரவை புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட சிலைகள்
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு பல்வேறு இந்து அமைப்பினர் செயலய்படுதி வருகின்றனார் . அதாவது ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறிய அளவிலான சிலைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச்செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது.
4 அடிக்கு மேல் உயரமுள்ள சிலைகளை வழிபாட்டுக்குழுவினர் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். சதுர்த்தி விழா முடிவடைந்த பின்னர் முன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம்.
விநாயகர் சிலை கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு
அதற்காக கிழக்கு கடற்கரை மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரையுள்ள இடங்களான பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் வசவன் குப்பம், தந்திராயன் குப்பம் மற்றும் அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம், வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.





















