Anna University: அண்ணா பல்கலை.யில் இனி இந்த பாடம் கட்டாயம்; புதிய பாடத்திட்டம்- என்னென்ன தெரியுமா?
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள பொறியியல் படிப்புகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் காலகட்டத்துக்கு ஏற்ப கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
என்னென்ன பாடங்கள்?
குறிப்பாக தரவு அறிவியல் (Data Science), இயந்திரக் கற்றல் (Machine Learning), தயாரிப்பு மேம்பாடு (Product Development), கண்டுபிடிப்புகள் (Re-Engineering for Innovation), காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், உடற்கல்வி மற்றும் தொழில்துறை தரநிலைகள் ஆகிய பாடங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்னதாக, 2022ஆம் ஆண்டில் புதிதாக, தமிழர் மரபு, அறிவியல் தமிழ் உட்பட 5 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதேபோல அண்மையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இளநிலை தொழிற்கல்வி (Bachelor of Vocational Degree) எனும் 3 ஆண்டு படிப்புகள் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல்
தேவைக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
யாருக்கெல்லாம் புதிய பாடத்திட்டம்?
அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் அதன் இணைப்புக் கல்லூரிகளிலும் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.






















