ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! கொல்லம்-சென்னை ரயில் நேர மாற்றம்: பயணிகள் மகிழ்ச்சி!
கொல்லம் - சென்னை (16102) விரைவு ரயில் மாலை 4 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் செற்றடையும் வகையில் அட்டவணை மாற்றம்.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 10 நிமிட இடைவெளியில் தென்காசி, சிவகாசி வழியாக மதுரை, சென்னைக்கு அடுத்தடுத்து இரு ரயில்கள் புறப்படுவதால், ரயில்களின் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்த நிலையில், கொல்லம் - சென்னை ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு 1904-ம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை, 2018-ம் ஆண்டு முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை - கொல்லம் விரைவு ரயில் (16102) தினசரி பிற்பகல் 12 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
மதுரை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - கொல்லம் எக்ஸ்பிரஸ், புனலூர் - குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களும் இணைக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் முதல் மதுரை - குருவாயூர் (16327/16328) எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குருவாயூரில் தினசரி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
கொல்லத்தில் இருந்து 12 மணிக்கு சென்னை ரயில் புறப்படும் நிலையில், 12.10-க்கு குருவாயூர் ரயில் மதுரை புறப்படுகிறது. கொல்லத்தில் இருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து புறப்படுவதால் அதன் பயனை பயணிகள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இதனால் கொல்லம் - சென்னை ரயில் கொல்லத்தில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கொல்லம் - சென்னை (16102) விரைவு ரயில் மாலை 4 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் செற்றடையும் வகையில் அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அட்டவணை மாற்றம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















