Zambia Pastor Died: ஜீசஸ் 2.0-வாக முயற்சி செய்த விபரீதம் : உயிரிழந்த ஜாம்பியா பாதிரியார்! என்ன ஆச்சு?
தனது ஜியோன் சபைக்கு வருபவர்களிடம், இயேசு போல தன்னாலும் மீண்டெழ முடியும் என இவர் சொல்லி வந்ததாகத் தெரிகிறது.
இயேசுநாதர் போல தானும் மீண்டெழுந்து வரும் முயற்சியை மேற்கொண்ட ஜாம்பியா நாட்டுப் பாதிரியார் உயிரிழந்தார். கிழக்கு ஆஃப்ரிக்க நாடான ஜாம்பியாவைச் சேர்ந்தவர் 22 வயதான ஜேம்ஸ் சக்காரா. இவர் அங்கே சதிஸா என்னும் நகரத்தில் கிறுத்தவப் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். அங்கிருந்த ஜியோ சர்ச்சில் பாதிரியாராகப் பணியாற்றி வந்துள்ளார். தனது ஜியோன் சபைக்கு வருபவர்களிடம் இயேசு போல தன்னாலும் மீண்டெழ முடியும் என இவர் சொல்லி வந்ததாகத் தெரிகிறது. இதற்காகத் தன்னைப் புதைப்பதற்கு உதவும்படி தனது சபைக்கு வருபவர்களிடம் இவர் கேட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அண்மையில் தனது சபையைச் சேர்ந்த மூன்று பேரை இதற்காகத் தேர்ந்தெடுத்து தான் மீண்டெழுவதற்கு உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உதவ அந்த மூவரும் முன்வந்துள்ளனர். தன்னைப் புதைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார் சக்காரா. மேலும், சக்காராவின் கட்டளைப்படி அவரது கைகளைக் கட்டி உயிருடன் குழிக்குள் புதைத்துள்ளனர். மூன்று நாட்களுக்குப் பிறகு குழியைத் தோண்டி தான் மீண்டெழுவதை வந்து பார்க்கும்படி தனது சபையினருக்குக் கூறியுள்ளார் ஜேம்ஸ் சக்காரா.
மூன்று நாட்கள் கழித்து ஊர்மக்கள் குழியைத் தோண்டிப் பார்க்கச் சென்ற நிலையில் குழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரைப் புதைத்தவர்களைக் கைது செய்துள்ளனர். உள்ளூர் செய்திகளில் வந்துள்ள தகவலின்படி சக்காரா தனது சபையினரிடம் தன்னைப் புதைப்பதற்காகக் குழி தோண்டச் சொல்லியுள்ளார். புதைப்பதற்கு முன்பு பைபிளில் சில வாசகங்களைத் தனது சபையினருக்கு அவர் வாசித்துக் காட்டியுள்ளார்.
🇿🇲 James Sakara, un joven pescador de 22 años, perdió la vida al querer “imitar la historia de Jesús” en Zambia.
— MCN Noticias (@mcn24H) August 24, 2021
El hombre quería demostrar a los feligreses que podía resucitar al tercer día como Jesucristo y pidió ser enterrado vivo en un agujero que fue cavado en la tierra. pic.twitter.com/z66Boa2l1P
இதையடுத்து அவரது கைகளைக் கட்டச் சொல்லி குழிக்குள் இறக்கிவிடச் சொல்லியிருக்கிறார். மூன்று நாட்கள் கழித்து குழியைத் தோண்டியெடுத்த மக்கள் சடங்குகள் செய்து அவரை உயிர்ப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இருந்தும், எத்தனையோ முறை முயன்றும் பாதிரியாரை அவர்களால் மீண்டெழச் செய்ய முடியவில்லை. சடலமாகவே கிடந்திருக்கிறார் சக்காரா. இதையடுத்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர் ஊர்மக்கள். இதற்கு அடுத்து அவரைப் புதைக்க உதவியவர்களில் ஒருவர் தானாகவே போலீசில் சரணடைந்துள்ளார். அவர் கொடுத்த தகவல்களை அடுத்து மற்றவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாதிரியாரின் இந்த விபரீதச் செயலால் அதிர்ந்துள்ளது ஜாம்பியா.