Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதினுக்கு உடல்நலக் குறைவா? ரஷிய அரசு பரபர தகவல்!
அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
Vladimir Putin: அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
புதினுக்கு உடல்நலக் குறைவா?
ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக இன்று தகவல் வெளியாகி இருந்தது. ரஷிய டெலிகிராம் சேனலான ஜெனரல் எஸ்.வி.ஆரை மேற்கோள் காட்டி, செய்திகள் வெளியாகின. அதாவது, கடந்த ஞாயிற்றுக் கிழமை புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த டெலிகிராம் சேனலின் அறிக்கையின்படி, ”ரஷ்ய அதிபர் புதின் அறையில் இருந்து ஞாயிற்று கிழமை இரவு 9 மணியளவில் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக புதினின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, புதின் தரையில் படுத்தப்படியே இருந்துள்ளார். அங்கு அவர் படுக்கைக்கு அருகில் இருந்த மேஜை கவிழ்ந்து கிடந்தது. மேலும், அவர் சாப்பிட்டு வைத்த பானம் மற்றும் உணவும் சிதறிக் கிடந்துள்ளது.
புதின் விழுந்தபோது, அவர் மேஜையில் பட்டு தரையில் விழுந்திருக்கக்கூடும். அவர் விழுந்த சத்தத்தை கேட்டு தான் பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருக்கின்றனர். பின்னர், அதிபர் புதின் அவரது அறையில் இருந்து பிரத்யேகமான அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிசிக்சை அளித்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், புதின் சுயநினைவு பெற்றார்" என்று சேனல் கூறியிருந்தது. இந்த தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, ரஷ்ய அரசு பரபரப்பான விளக்கத்தை அளித்திருக்கிறது.
ரஷ்யா விளக்கம்:
அதிபர் புதினின் உடல்நிலை குறித்த வெளியான தகவலுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "புதின் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அக்டோபர் 7 அன்று அவர் 71 வயதை எட்டினார். அவர் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இது தொடர்பான காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. எனவே, அவரது உடல்நிலை நன்றாக தான் இருக்கிறது. ஆனால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக இன்று தகவல் வெளியாகி இருந்தது பொய்யானது. இது ஒரு புரளி. மேலும், பொது நிகழ்ச்சியில், புதினுக்கு பதிலாக அவரை போலத் தோற்றம் அளிக்கும் ஒருவர் பங்கேற்பதாக தகவல் வெளியாகின. இது முற்றிலும் பொய்யான தகவல்" என்றார்.
முன்னதாக, உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, புதினின் உடல்நிலை மோசம் அடைந்ததாக பல தகவல் வெளியாகின. புதினுக்கு புற்றுநோய் அல்லது பார்கின்சன் நோய் இருக்கலாம் செய்தி வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு, பொது நிகழ்ச்சிகளிலும் அதிகாரப்பூர்வ சந்திப்புகளிலும் புதின் நடுங்குவது போன்றும் வழக்கத்திற்கு மாறாக அவரது கால் ஆடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின. மேலும், தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வந்ததால், ஊசி போட்ட இடங்களில் தடங்கள் இருப்பது என்றெல்லாம் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், ரஷ்ய அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. புதினின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.