(Source: ECI/ABP News/ABP Majha)
Pakistan Coalition Government: கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமராக ஷேபாஸ் ஷெரீப்.. அதிபராக சர்தாரி..!
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 79 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றன.
பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற பொது தேர்தலை தொடர்ந்து, உடனடியாக வாக்கு எண்ணும் பணியும் நடைபெற்றது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டு, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பொதுத்தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆகியும், அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது. பாகிஸ்தானின் பொது தேர்தலுக்கு மொத்தமாக 266 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், 265 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை. தற்போது சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் - தெஹ்ரீக்-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 92 இடங்களில் வெற்றிபெற்றன. இந்த கட்சியை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 79 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பல நாள் பேச்சு வார்த்தைக்கு பிறகு, பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ - ஜர்தாரி நேற்று பிற்பகல் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷேபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் சர்தாரி அதிபராக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவரும், நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் பஞ்சாப் முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும் இணைந்து பாகிஸ்தானில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றுவிட்டது. இதையடுத்து, தற்போது புதிய அரசாங்கத்தை அமைக்கும் நிலைக்கு தயாராகிவிட்டோம். தேர்தலுக்கு பிறகு, நிறைய குழப்பங்கள் நீடித்த நிலையில், , பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி இணைந்து நாட்டின் நலனுக்காக மீண்டும் ஒரு அரசாங்கத்தை அமைக்க இருக்கிறது என தெரிவித்தனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் எதுவும் இலாகாக்கள் கேட்கப்பட்டதா என பிரதமராக பதவியேற்க உள்ள ஷெபாஸ் ஷெரீபிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இரு கட்சிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முதல் நாளில் இருந்தே பிலாவல் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி, அமைச்சர் பதவி எதையும் கேட்கவில்லை. இரு கட்சிகளும் கூட்டணி வைத்து கொண்டதால், நாங்கள் அவர்களின் கோரிக்கைகளையும், அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று ஆகிவிடாது. இரு கட்சிகளும் இணைந்து நடுத்தரமாக செயல்படுவதே உண்மையான அரசியல் வெற்றி” என தெரிவித்தார்.
மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி 2008 முதல் 2013 வரை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.