(Source: ECI/ABP News/ABP Majha)
Layoff: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... தொடரும் லே ஆஃப் சோகம்..! 15 சதவிகித ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய மீஷோ....!
உலகம் முழுவதும் லே ஆஃப் காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் முன்னணி நிறுவனங்களில் தங்களது வேலையை இழந்து வருகின்றனர்.
உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
மீஷோ
அதன் தொடர்ச்சியாக, பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மீஷோ ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பணியாளர்கள் எண்ணிக்கையில் 15 சதவிகித ஆட்களை குறைத்துள்ளது மீஷோ. அதாவது, கிட்டத்தட்ட 251 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்ப்பட்டுள்ளனர். இதன்மூலம், மீஷோ நிறுவனத்திற்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு குறைந்துள்ளதாக தெரிகிறது.
தற்போது மீஷோ நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 251 ஊழியர்களுக்கு அவரவர் சம்பளம், பதவி ஆகியவற்றை பொருத்து 2.5 மாதம் முதல் 9 மாதங்கள் வரை பணிநீக்க பலன் தொகை (severance payment) வழங்கப்படும் என மீஷோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை உள்ளிட்டவை இருந்தாலும் திருப்பி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிவில் விற்பனை:
ஏற்கனவே கடந்த ஆண்டு மீஷோ நிறுவனம் தனது மளிகை பொருள் வணிகத்தை நிறுத்த முடிவெடுத்தது. சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் இயங்கும் இந்த வணிகம் 90 சதவீத நகரங்களில் மூடப்பட்டது. மேலும், இதில் வேலை பார்த்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது.
2020 முதல் 2022 வரையான காலக்கட்டத்தில் இந்த நிறுவனம் 10 மடங்கு வளர்ச்சி அடைந்தது. ஆனால் தற்போது விற்பனையானது சரிவுடன் இருப்பதாக தெரிகிறது. இதனால் வருவாய் பற்றாக்குறை மற்றும் அதிக செலவினங்கள் காரணமாக களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் இதுபோன்று பணிநீக்க நடவடிக்கையில் மீஷோ கையில் எடுத்துள்ளது.
ஷாப்பிபை நிறுவனம்
மீஷோவை தொடர்ந்து கனடாவின் பிரபல இ-காமர்ஸ் (E-commerce) நிறுவனமான ஷாப்பிபை (shopify) தற்போது பணிநிக்க அறிவிப்பை வெளியிட்டது. பணியாளர்கள் எண்ணிக்கையில் 20 சதவிகித ஆட்களை குறைக்கப்படுவதாக ஷாப்பிபை (shopify) அறிவித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதாக ஷாப்பிபை அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் கடந்த ஆண்டு 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த 12 மாதங்களில் இரண்டாவது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஷாப்பிபை நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணிநீக்கங்கள்
இதேபோன்று அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி மேலும் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
மேலும், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா சில தினங்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, விரைவில் உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனமானது ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், 11 ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.