Exclusive: ''பகலில் தூக்கம்; 5ஆவது முயற்சி''- யுபிஎஸ்சி தேர்வில் தர்மபுரி பையன் சிவச்சந்திரன் சாதித்தது எப்படி?
தொடர்ச்சியாக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ரிலாக்ஸ் ஆக இருப்பது மிகவும் முக்கியம்- யுபிஎஸ்சி தமிழ்நாடு டாப்பர் சிவச்சந்திரன்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் ஏபிபி நாடுவுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி.
ஐஏஎஸ் தேர்வில் மாநிலத்தில் முதலிடம், அகில இந்திய அளவில் 23ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐஏஎஸ் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. அதிக உழைப்புக் கோரக் கூடிய யுபிஎஸ்சி தேர்வுக்கு எப்படி, எவ்வளவு ஆண்டுகள் தயார் ஆனீர்கள்?
எனக்கு இது ஐந்தாவது முயற்சி. கடந்த காலங்களில் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனங்கள் நடத்திய, மாதிரி தேர்வுகளை நிறைய எழுதினேன். 2023- 24 ஆம் ஆண்டு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றேன். அங்கு முதன்மை தேர்வுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். அவர்கள் கொடுத்த பயிற்சி உதவிகரமாக இருந்தது.
யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக பள்ளி பாடத்திட்டம் முக்கியம். அதில் ஸ்ட்ராங்காக இருந்தால், இந்தத் தேர்வு எளிதாக இருக்கும்.
நான் முதல்வன் திட்டத்தில் என்ன மாதிரியான பயிற்சி கொடுக்கப்பட்டது?
இங்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என அனைத்து நிலைத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நான் அங்கு முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற்றேன். விடை எழுதி பார்ப்பது, நேர்காணலில் எப்படி கலந்துகொள்வது உள்ளிட்டவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நான் முதல்வன் திட்ட இயக்குநரே நேரடியாக எங்களைத் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருப்பார். அது மன உறுதியையும் தைரியத்தையும் கொடுத்தது.
அதேபோல மாணவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் பண உதவித் தொகையும் அளித்தார்கள். இது விளிம்பு நிலை மாணவர்கள், தங்களின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் படிக்கும்போது எந்தவித வருமானமும் இருக்காது.
ஐந்தாவது முறையாக முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினீர்களா? எதையாவது காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருந்ததா?
முதல் இரண்டு முயற்சிகளிலும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன் அடுத்தடுத்த ஆண்டுகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக படித்தேன். அதனால்தான் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடிந்தது. தொடர்ச்சியாக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ரிலாக்ஸ் ஆக இருப்பது மிகவும் முக்கியம். நண்பர்களிடம் பேசுவது, சேர்ந்து கூட்டாய்ப் படிப்பது ஆகியவற்றைச் செய்தேன். அவை நம் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்?
குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கம் தேவை. சராசரியாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டும். தினந்தோறும் நான் மதியம் 20 அல்லது 30 நிமிடங்கள் உறங்குவேன். அது இரவு 10 மணி வரை நான் படிக்க உதவிகரமாக இருந்தது.
மூன்று நிலைத் தேர்வுகளுக்கும் தயாராகும் வழிமுறை பற்றி சொல்லுங்களேன்…
முதல்நிலைத் தேர்வுக்கு நிறையப் படிக்க வேண்டும். படித்து முடித்தபிறகு அதை தெளிவாக எழுத வேண்டும். முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை விடையை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நேர்காணலில் நம்முடைய ஆளுமைப் பண்பு பரிசோதிக்கப்படும்.
இது ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி என்றெல்லாம் நிறைய வாட்ஸப் ஃபார்வர்டுகளைக் காணமுடிகிறது அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?
வாட்ஸப்பில் நாம் படித்த எந்த மாதிரியும் இருக்காது. உயர் நிலையில் இருக்கும் நம் அண்டை வீட்டுக்காரர்கள் எப்படி நம்முடன் பேசுவார்களோ அப்படித்தான் நேர்காணலும் இருக்கும். நம் நாட்டுக்கு எப்படி சேவையாற்றுவோம் என்பதை பரிசோதிப்பார்கள். அதற்கு 20 முதல் 25 நிமிடங்கள் உரையாடல் நடக்கும். அதில் வெற்றுக் கதை எதுவும் பேச முடியாது என்பதால் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள், நம்முடைய சாதனைகள் ஆகியவை குறித்துக் கேள்விகள் கேட்பார்கள்.
உங்களின் குடும்ப பின்னணி குறித்து சொல்லுங்கள்.
அப்பா, அம்மா இருவரும் நிதி நிறுவனப் பின்னணி கொண்டவர்கள், அப்பா, சாட்டர்ட் அக்கவுண்டண்டாக இருக்கிறார், தம்பி இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். என் சொந்த ஊர் தர்மபுரி, சென்னையில் இருக்கிறோம்.
யுபிஎஸ்சி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
படிப்பில் பர்ஃபெக்ஷன் வேண்டும் என்பதற்காக நிறைய படித்துக் கொண்டே இருப்போம். ஆனால், ஒரு கட்டத்தில் நாம் படிப்பதை நிறுத்திவிட்டு, அதை எப்படி தேர்வு அறையில் மீள் உருவாக்கம் செய்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு தேர்வுக்கு தயாராவதோடு மட்டுமல்லாமல், அதை எழுதி பார்த்தும் பயிற்சி பெற வேண்டும். அதுபோல சுய மதிப்பீடு முக்கியம்.
இவ்வாறு சிவச்சந்திரன் தெரிவித்தார்.

