Hunter Biden: பரபரப்பு.. வரி ஏய்ப்பு, சட்டவிரோதமாக துப்பாக்கி.. குற்றங்களை ஒப்புக்கொண்ட அதிபர் ஜோ பைடன் மகன்?
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர், வருமான வரி செலுத்தத் தவறிய குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர், வருமான வரி செலுத்தத் தவறிய குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று 46-வது அதிபராக பதவியேற்றார். அடுத்தாண்டு மீண்டும் அங்கு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மீண்டும் போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜோ பைடனுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அவரது மகன்களில் ஒருவரான ஹண்டர் பைடன் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வரி செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததகவும் வழக்கு தொடரப்பட்டது. இது அதிபர் தேர்தலின் போது பேசு பொருளாக மாறியது.
டெலவாரே மாகாணத்தில் இந்த வழக்கு கிட்டதட்ட 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், ஹண்டர் பைடன் சட்டப்படி வழக்கை எதிர்கொண்டார். இந்நிலையில் இந்த 2 வழக்குகளிலும் குற்றத்தை ஹண்டர் பைடன் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் வருமான வரி செலுத்த தவறிய இரண்டு வழக்குகளில் தலா ஓராண்டு சிறையும், துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்ற நிலையில் இதனை தவிர்க்க, மத்திய அரசின் வழக்கறிஞர்களுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது ஹண்டர் பைடன் கடந்த காலங்களில் போதைப்பொருளுடன் பயன்பாடு இருந்ததாக ஒப்புக்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது
மேலும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனம் காரணமாக தான் செய்த இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்பது முக்கியம் என்று ஹண்டர் பைடன் முடிவு செய்ததாக ஹண்டர் பிடனின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் கிளார்க் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.