சட்டத்திற்கு புறம்பான முறையில் கருக்கலைப்பு… 28 மாதம் சிறைத்தண்டனை விதித்த இங்கிலாந்து நீதிமன்றம்!
இங்கிலாந்தில், கர்ப்பமாகி 10 வாரங்களுக்கு முன், வீட்டிலேயே மருத்துவ கருக்கலைப்பு செய்ய முடியும்.
இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட கர்ப்பகால வரம்பை தாண்டி சென்றபின் கருக்கலைப்பு மருந்துகளைப் பயன்படுத்திய பிரிட்டிஷ் பெண்ணுக்கு 28 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக PA செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
28 மாத சிறை தண்டனை
இந்த வழக்கில், 44 வயதாகும் மூன்று குழந்தைகளின் தாய்க்கு, மத்திய இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு நாட்டில் இனப்பெருக்க நீதிச் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தூண்டியுள்ளது. கருக்கலைப்பு செய்வதற்கு கருவிகளைப் பயன்படுத்தியதற்காக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அந்நாட்டில் இதற்காக அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பதால், அவர் 14 மாதங்கள் காவலில் இருப்பார் என்றும், விடுதலையான பின் 14 மாதங்கள் ரிமாண்டில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவர் 2019 ஆம் ஆண்டில் கர்ப்பமான பிறகு, பிப்ரவரி மற்றும் மே 2020 க்கு இடைப்பட்ட மாதங்களில் கருக்கலைப்பு தொடர்பான பல பொருட்களை ஆன்லைனில் தேடியதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
மருந்து உட்கொண்டதால் இறந்து பிறந்த குழந்தை
அவர் மே 6, 2020 அன்று கருக்கலைப்பு பராமரிப்பு மருத்துவமனையான 'பிரிட்டிஷ் கர்ப்ப ஆலோசனை சேவையில் (பிபிஏஎஸ்)' செவிலியருடன் உரையாடினார் என்று பிஏ மீடியா தெரிவித்துள்ளது. பிபிஏஎஸ் தனது பதில்களின் அடிப்படையில், அவர் ஏழு வார கர்ப்பமாக இருப்பதாக கூறிய பிறகு, கருக்கலைப்பு மருந்துகளை அனுப்பியதாக தெரிகிறது. மருந்து உட்கொண்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி இருப்பதாக அவசர அழைப்பு வந்துள்ளது. தொலைபேசி அழைப்பின் போதே அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. பின்னர் அவர் உட்கொண்ட மருந்துகள் காரணமாக மருத்துவமனையில் அந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பொய் கூறி மருந்து பெற்ற பெண்
பிஏ மீடியாவின் கூற்றுப்படி, குழந்தையின் இறப்புக்கான காரணம் கருக்கலைப்பு மருந்துகளின் பயன்பாடு என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நேஷனல் ஹெல்த் சர்வீஸின் படி, கர்ப்பமாகி 10 வாரங்களுக்கு முன், வீட்டிலேயே மருத்துவ கருக்கலைப்பு செய்ய முடியும் என்று இங்கிலாந்தில் உள்ள கருக்கலைப்பு சட்டங்கள் விதிக்கின்றன. அதன் அடிப்படையிலேயே மருத்துவமனை மருந்து கொடுத்துள்ளது. ஆனால் அவர் மருந்தை வாங்கி சாப்பிடும்போது 32 இல் இருந்து 36 மாத கர்ப்பமாக இருந்ததாக குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் அந்த பெண் 7 வார கர்ப்பம் என்று பொய்யாக கூறியதால், மருத்துவமனை மருந்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டத்தில் உடனடி மாற்றம் தேவை
எளிதாக ஒருவர் அந்த மாத்திரைகளை பொய் சொல்லி வாங்கிவிடும் அளவுக்கு சட்டம் வலிமையற்று இருப்பதால், இந்த வழக்கு இங்கிலாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை அவசர சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவையை நிலை நிறுத்துகிறது. “இங்கிலாந்தில் வன்முறைக் குற்றத்திற்கான சராசரி சிறைத் தண்டனை 18 மாதங்கள். சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கருக்கலைப்பு செய்த ஒரு பெண்ணுக்கு 1868 சட்டத்தின் கீழ் 28 மாதங்கள் கிடைத்தது” என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீசி ட்வீட் செய்துள்ளார். மேலும் "இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு என்பதை பாதுகாப்பான மனித உரிமையாக மாற்ற எங்களுக்கு அவசர சீர்திருத்தம் தேவை," என்றார். இந்த வழக்கு குறித்து மருத்துவமனை பிபிஏஎஸ்-உம் அதே கருத்தை வழிமொழிந்து டுவீட் செய்துள்ளது.