Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் தவிப்பிற்கு பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புகின்றனர். அந்த நிகழ்வை நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு, 9 நாட்கள் பயணமாக சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியாமல், 9 மாதங்களாக அங்கேயே சிக்கித் தவித்தனர். இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், அவர்கள் பூமி திரும்புகின்றனர்.
சர்வதேச விண்வெளி மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்
விண்வெளியில் ஆராய்ச்சிக்காக, பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. அதற்காக, விண்வெளி வீரர்கள் ஓரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பின்னர் பூமி திரும்புவார்கள். இப்படி, பல குழுக்கள் அங்கு சென்று திரும்புவது வழக்கம். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சுமார் 9 நாட்களில் பூமி திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் பூமிக்கு திரும்ப அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இப்படியே, கிட்டத்தட்ட 9 மாதங்கள் அவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
மீட்புப் பணியில் களமிறங்கிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்
இப்படிப்பட்ட சூழலில், இரு விண்வெளி வீரர்களையும் மீட்டு பூமிக்கு அழைத்து வரும் பணியில், ட்ரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் களமிறங்கியது. இதைத் தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா இணைந்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்ட ராக்கெட், அண்மையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கோளாறுகள் சரி செய்யப்பட்டு, பால்கன் 9 ராக்கெட்டில், 10-வது குழு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சனிக்கிழமை இரவு ஏவப்பட்டது. தனது வெற்றிகரமான பயணத்திற்குப்பின், ஞாயிற்றுக்கிழமை, சர்வதேச விண்வெளி மையத்துடன், டிராகன் காப்ஸ்யூல் டாக்கிங் செய்யப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் சென்ற புதிய விண்வெளி வீரர்கள், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை சந்திக்கும் உற்சாகமான காட்சி, இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், அமெரிக்க நேரப்படி, நேற்று இரவு 10.45 மணிக்கு, சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விண்கலம், அமெரிக்க நேரப்படி செவ்வாய் மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நேரப்படி, புதன் கிழமை அதிகாலை சுமார் 3.30 மணி.
இதன் மூலம், 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமியின் காற்றை சுவாசிக்க உள்ளனர். அவர்கள் பூமி திரும்பும் நிகழ்வை, நாசா நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. இதைக் காண உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

