Villupuram: 10 ஆண்டாக சாலைவசதி கோரும் கிராம மக்கள்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வேதனை
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
10 ஆண்டுகளாக சாலைவசதி கேட்கும் 5 கிராம மக்கள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மரக்காணம் பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில்...
மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வண்டிப்பாளையம் மற்றும் ஆத்திகுப்பம் ஊராட்சிகள். இந்த பகுதியை சுற்றிலும் தேவிகுளம், நடுக்குப்பம், ஓமிப்பேர், அடசல், கோடிகப்பம், கிளாம்பாக்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் அனுமந்தை, புதுவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பக்கிங்காம் கால்வாய் வழியாக வண்டிப்பாளையம் ஆத்திகுப்பம் ஊராட்சி களுக்கு இடைப்பட்ட சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை கடந்த 15 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுக்கு முன் இச்சாலையை சரி செய்யவும், பக்கிங்காம் கால்வாயில் பாலம் அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனைத் தொடர்ந்து அப்பணியை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது வனத்துறை சார்பில் இந்த சாலை உள்ள பகுதி தற்பொழுது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இப்போது இங்கு சாலை அமைக்க கூடாது என தடுத்து நிறுத்தி விட்டனர். மேலும், இங்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் டெல்லியில் உள்ள வனத்துறை அலுவலகம் முதல் விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் வரை அனுமதி பெற்று வர வேண்டும் என கூறிவிட்டனர். இதன் காரணமாக இச்சாலை அமைக்கும் பணி தடைபட்டது. இந்நிலையில் இந்த தார் சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மரக்காணம் வழியாகத்தான் புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது .பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி தார் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளாவது:-
அனைத்து வட்டாரத்திலும் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வேளாண்மைத்துறை மட்டுமல்லாது அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு அதிகமாக சாகுபடி செய்யக்கூடிய விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பின் விளைச்சல் குறைந்துள்ளதகாவும் அதற்கு காரணம் கரும்பில் ஏற்படும் பூச்சிகள் என்பதால் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உளுந்துக்கு பயிர் காப்பீடு செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நேரடி நெல்கொள்முதல் நிலையம் வரும் ஜனவரி முதல் வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,காட்டுபன்றிகள் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலான தொகையினை அரசாங்கத்திடம் பெற்று விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டுவளர்ச்சி துறை மூலம் அனைத்து வட்டாரத்தில் விவசாயிகளை ஊக்குவித்து அனைத்து வட்டாரத்திலும் பட்டு சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனைக்குழுவில் சரியான விலை பட்டியல் வைத்திடவும் அவற்றை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்திடவும், தோட்டக்கலை துறை மூலமாக மானியத்தில் கொடுக்கக்கூடிய காய்கறி பந்தலின் உபகரணங்களை தரமானதாக வழங்கிட வேண்டும். வல்லம் வட்டாரத்தில் காலியாக உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானியத்தில் வழங்கப்படும் பவர் டில்லர், பவர் வீடர் மற்றும் ஸ்பிரெயர்களுக்கு அனைத்து வட்டாரத்தில் service center அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வேளாண் விரிவாக்க மையத்திலும் அம்மோனியா சல்பேட் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெட்டனை கிராமத்தில் வேளாண் விரிவாக்க மையம் கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அவற்றில் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வைத்த பொதுவான கோரிக்கைகளாவது. அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அனைத்து விவசாயிகளுக்கும் அத்தியாவசிய தேவையான பட்டா மாறுதல் மற்றும் UDR திருத்தம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, இக்கோரிக்கைகளும் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றி கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.