Cyclone Mandous: மாண்டோஸ் புயலால் விழுப்புரத்தில் பாதிப்பு இல்லை - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
”பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை இந்தப் புயலால் அதிக அளவில் பாதிப்பு இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டாஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் பிள்ளை சாவடி பொம்மையார்பாளையம் மரக்காணம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் டி.ஐ.ஜி. எஸ்பி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மாண்டாஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மரக்காணம், பிள்ளை சாவடி,பொம்மையார்பாளையம்,போன்ற 19 மீனவ கிராமங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மீனவ கிராமங்கள், மற்றும் நிவாரண மையங்களில் தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக பிள்ளைசாவடி பகுதியில் சுமார் 4க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பிள்ளை சாவடி, பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் கடல் செம்மண் நிறத்தில் மாறி உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொறுத்தவரை 13 மரங்கள் விழுந்து உள்ளன. அவை உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் மழை முடியும் வரை இந்தப் பகுதியில் நிவாரண முகாம்கள் அனைத்தும் இருக்கும். மேலும் மின்சாரம் 90 விழுக்காடு தரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை இந்தப் புயலால் அதிக அளவில் பாதிப்பு இல்லை. மேலும் பிள்ளைச்சாவடி பகுதியில் தூண்டில் வரை அதாவது கருங்கல் கொட்டி கடல் அரிப்பு ஏற்படாதவாறு உடனடியாக பணிகள் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட எஸ்பி கூறுகையில், சென்னை ஈ சி ஆர் சாலையில் காலை 5 மணி முதல் போக்குவரத்துக்கு, காவல் துறையினர் சீல் வைத்த பகுதியை திறந்து விட்டுள்ளனர். வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும், மரங்கள் இருக்கும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.