26 தேர்தல் முக்கியம் ! பொன்முடிக்கு ஃபுல் ஸ்டாப் ; லட்சுமணனுக்கு க்ரீன் சிக்னல் ; முதல்வர் ஸ்டாலின் அதிரடி கணக்கு
‘நீயே விழுப்புரத்தை வேண்டாம் என்று தலைமைக்கு சொல்லு’ விக்கிரவாண்டி வானூர் மட்டும் பார்த்துக் கொள்வதாக நீ சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் - அறிவாலயத்தில் பஞ்சாயத்து.

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் மாற்றம்
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிவதற்கு முன்பு விழுப்புரம் மாவட்ட செயலாளராக அமைச்சர் பொன்முடி பதவி வகித்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக அங்கயற்கண்ணி நியமிக்கபட்டார். அதன்பின் கட்சியின் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக புகழேந்தியும், வடக்கு மாவட்ட செயலாளராக மஸ்தானும் நியமிக்கப்பட்டனர். உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு புகழேந்தி காலமானர். பின்பு மாவட்ட பொறுப்பாளராக கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டார். வடக்கு மாவட்ட செயலாளரான மஸ்தானுக்கு பதில் மாவட்ட அவைத்தலைவராக இருந்த டாக்டர் சேகர் மாவட்ட பொறுப்பாளரானார். அவர் வகித்த அவைத்தலைவர் பதவியை மஸ்தானுக்கு திமுக தலைமை வழங்கியது.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான திமுக
இந்நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றுவரும் திமுக, 2026-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக எம் எல் ஏ மஸ்தானும், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கௌதமசிகாமணியும், விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பளராக எம்எல்ஏ லட்சுமணனும் கடந்த 13ம் தேதி திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டனர்.
லட்சுமணனுக்கு மாவட்ட செயலாளர் பதவி தந்த முதல்வர் ஸ்டாலின்
இந்த அறிவிப்பு விழுப்புரம் மாவட்ட திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மஸ்தானுக்கு செஞ்சி, மயிலம், திண்டிவனம் என 3 தொகுதிகளும், கௌதமசிகாமணிக்கு விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் என 2 தொகுதிகளும், மாவட்டத்தில் புதியதாக தொகுதி பிரித்து விழுப்புரம், வானூர் தொகுதிக்கு லட்சுமணனுக்கும் வழங்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒரே ஒரு மாவட்ட செயலாளர் தான்!
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பதவி அளித்த திமுக, தற்போது 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் என அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை அப்போது பாமக எடுத்தபோது திமுகவினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அதே நேரம் பலவீனமடைந்துவிட்டதாக பேசப்படும் அதிமுகவிற்கு இப்போதும் விழுப்புரம் மாவட்ட செயலாளராக சிவி சண்முகம் மட்டுமே பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 27.2.2015ம் ஆண்டு அப்போது அதிமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த லட்சுமணன், அதன்பின் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அதிமுக அமைப்பு செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த லட்சுமணன் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பின்னர் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு, எதிர்த்து போட்டியிட்ட சிவி சண்முகத்தை வென்றார்.
குஷியில் துள்ளி குதித்த திமுகவினர்
விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரையில் விழுப்புரத்தில் லட்சுமணனின் வாக்குகளே அதிக அளவில் உள்ளது. இருப்பினும் மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை தலைமை அறிவித்து அதற்கான பணியினை மேற்கொண்டு வந்தனர். ஆனால் திமுகவினர் இடையே பொன்முடியின் மகனுக்கு மறைமுக வெறுப்பு அதிக அளவில் இருந்தது. இதனால் மௌனமாக இருந்த திமுகவினர் தற்பொழுது குஷியில் துள்ளி குதிக்கின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் பஞ்சாயத்து
விழுப்புரம் மற்றும் வானூர் இரண்டு தொகுதியும் வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள பகுதி எனவே திமுக தலைமை வருகின்ற 26 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் மாவட்ட செயலாளர் பதவி ஏற்றவுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்திக்க காத்திருந்தபோது மிகப்பெரிய பஞ்சாயத்து அங்கு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பொன்முடியின் மகனான கௌதம சிகாமணிக்கு விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் தொகுதியை வழங்க வேண்டும் எனவும் விக்கிரவாண்டி வானூர் தொகுதியை மாற்றித் தருமாறு அறிவாலயம் வாசலில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் காத்திருந்தனர். ஆனால் தலைமை சற்றும் எதிர்பார்க்காமல் ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்டதுதான்.. சரியான முறையில் தான் தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது.
"விழுப்புரத்தை வேணான்னு சொல்லுய"
இந்தப் பஞ்சாயத்தின் போது அமைச்சர் பொன்முடி நேரடியாக லட்சுமணனிடம் ‘நீயே விழுப்புரத்தை வேண்டாம் என்று தலைமைக்கு சொல்லு’ விக்கிரவாண்டி வானூர் மட்டும் பார்த்துக் கொள்வதாக நீ சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த லட்சுமணன் தலைமையின் அறிவிப்பை என்னால் மீற முடியாது என கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் பொன்முடி மற்றும் அவரது மகனின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததனால் லட்சுமணனின் பேச்சு மௌனமாகவே இருந்தது. அதற்காக எந்த ஒரு எதிர்ப்பு தெரிவிக்காமல் திமுகவில் இணைந்து அமைதியான முறையில் அவரது பணியை மேற்கொண்டு வந்தார். அது மட்டும் இன்றி அவரது தொகுதியில் ஒரு சிறு பிரச்சனை என்றாலும் சம்பவ இடத்திற்கு நேராக செல்வதும் ஏதேனும் ஒருவர் வீட்டில் துக்கம், சந்தோஷம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது அன்றைய நாளில் தவறவிட்டாலும் மறுநாள் நேரில் சென்று பார்ப்பது, அவர்களுக்கு ஊக்கத்தொகை, நிவாரணம் வழங்குவது போன்றவற்றில் மறக்காமல் செய்வார்.
விழுப்புரத்தில் திமுக வெற்றியை உறுதி செய்த லட்சுமணன்
இதனால் லட்சுமணனின் ராஜ்ஜியம் விழுப்புரத்தில் அதிகரித்து இருந்தது. குறிப்பாக பெண்களின் முழுமையாகவே லட்சுமணன் பக்கம் இருப்பது என்பது நிதர்சனமான உண்மை. இதன் அடிப்படையில் தான் திமுக கள ஆய்வு செய்து லட்சுமணனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியிருக்கிறது. விழுப்புரத்தில் அதிமுக சார்பில் சிவி சண்முகம் நின்றாலும் வேறு யார் நின்றாலும் அவர்கள் தோற்கும் அளவிற்கு லட்சுமணனிடம் பலம் உள்ளதால் அவருக்கு இந்த தொகுதியை வழங்கி உள்ளது. இதனால் அமைச்சர் பொன்முடிக்கு அறிவாலயம் மறுப்பு போட்டு விட்டது. இதனால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்பொழுது மனக்குமுறலில் உள்ளனர்.
தனது மகனை முன்னிறுத்த விழுப்புரத்தில் பல்வேறு உட்கட்ட வேலைகளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் தொகுதி ஒதுக்கி பொன்முடியின் ராஜ்யத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது அறிவாலயம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

