பிரபல ஸ்வீட் கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ஆரணியில் அதிர்ச்சி
தீ விபத்தில் குடோன் முழுவதும் தீ பரவி ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.
![பிரபல ஸ்வீட் கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ஆரணியில் அதிர்ச்சி Tiruvannamalai news sudden fire broke out at a popular sweets shop on Arani Bazar Road due to gas leakage and 3 cylinders bursting - TNN பிரபல ஸ்வீட் கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ஆரணியில் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/7956e58ffc7e80afebd7fefe11ca71f81711783697564113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆரணி நகர் பகுதியில் பிரபல ஸ்வீட் கடையில் பயங்கர தீ விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் மார்க்கெட் வீதி ஆரணியை சேர்ந்த அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரிபாபு என்பவர் பாரி ஸ்வீட்ஸ் என்ற கடையை நடத்தி வருகின்றார். இந்த கடையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த கடையின் கிளை செஞ்சியில் துவங்கப்பட்டது. இந்த இரண்டு கடைகளுக்கும் பலகாரங்கள் தயாரிப்பதற்கு ஸ்வீட்ஸ் கடைக்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்கி வைக்க ஆரணியில் உள்ள கடையின் பின்புறத்தில் தகர ஷீட்டுகள் கொண்டு குடோன் அமைக்கப்பட்டு கடைகளுக்கு தேவையான கடலை மாவு , மைதா மாவு , முந்திரி, திராட்சை, சர்க்கரை, சமையல் எண்ணை மற்றும் கேஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த குடோன் அருகே 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று மாலை கடையின் வேலையாட்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் வழக்கம் போல் வேலைசெய்து வந்தனர். அந்தப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் பாரி பாபுவுக்கு சொந்தமான குடோனில் இருந்து திடீரென கேஸ் சிலிண்டர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
சிலண்டர் வெடித்து தீ விபத்து
இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிதறி ஓடினர். அதேநேரத்தில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் வைக்கபட்டு இருந்த சுமார் 10-சிலிண்டர்களில் 4-சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் குடோன் முழுவதும் மளமளவென தீ பரவி தீ மேலெழுந்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அருகில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அணைக்க முயன்று வந்தனர். இதனையொடுத்து இச்சம்பவம் ஆரணி பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் அங்கு பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளனர். பின்னர் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தீ விபத்தால் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
மேலும் தொடர் தீ மூட்டத்தால் அந்த பகுதி முழுவதும் கருப்புகை ஏற்பட்டன. தீ பரவாமல் இருக்க அருகில் உள்ள எண்ணை குடோனில் உள்ள பேரல்களை அப்புற படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். குடோனில் கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்து சிதறியபோது குடோனில் தொழிலாளர்கள் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதற்கு காரணம் மின்கசிவு காரணமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.இந்த தீ விபத்தால் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக உரிமையாளர் பாரிபாபு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியில் பிரபல ஸ்வீட்ஸ் கடை குடோனில் எரிவாயு கசிவு காரணமாக 4 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்துகுள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)