”சென்னை தியேட்டர் கேண்டினில் கெட்டுப்போன காப்பி விற்பனை” : நெல்லை நீதிமன்றம் அதிரடி..
”குடிப்பதற்கு வழங்கிய காபி கெட்டுப்போனதாக இருந்தாலும் அதற்கான உரிய நியாயத்தை பெற்று தந்த நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.”
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை வடக்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது35). இவர் சென்னை சென்றிருந்த நிலையில் அங்குள்ள தனியார் திரையரங்கில் கடந்த 05-06-2023 அன்று திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது இடைவேளை நேரத்தில் திரையரங்கில் உள்ள கேண்டினில் 180 எம்எல் ரூ.160/- செலுத்தி பில்டர் காபி வாங்கி குடித்துள்ளார். ஆனால் பில்டர் காபியானது முழுமையாக கெட்டுப்போன நிலையில் இருந்துள்ளது. காபி கெட்டுப்போனதை காட்டி மாற்றி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கேண்டினில் காப்பியை மாற்றித் தர முடியாது என மறுத்ததாக தெரிகிறது.
மேலும் தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கெட்டுப்போன காபியை புகைப்படம் எடுத்து உள்ளார் சிவசுப்பிரமணியன். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிவசுப்பிரமணியன் நெல்லை திரும்பிய நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் இதனை விசாரித்த ஆணைய நீதிபதி பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் சிவசுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 7000 /-வழங்க வேண்டும் என்றும், வழக்குச் செலவு ரூபாய் 3000/-சேர்த்து மொத்தம் ரூபாய் 10,000/- ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். குடிப்பதற்கு வழங்கிய காபி கெட்டுப்போனதாக இருந்தாலும் அதற்கான உரிய நியாயத்தை பெற்று தந்த நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.