மாணவர் கடத்தல் வழக்கு: குஜராத் - மதுரை போலீஸார் ஐகோர்ட் மகாராஜாவிடம் விசாரணை செய்ய முடிவு
தூத்துக்குடி தனிப்படை போலீசார் 4 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்தனர். அவரை பிடிக்க முயன்ற போது, அவர் தப்பி ஓட முயற்சித்து தவறி விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் போலீஸார் மீது மிளகாய் பொடி தூவி, தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியை சுமார் 4 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கோவையில் கைது செய்தனர்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் ஐகோர்ட் மகராஜா (30). இவர் மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த பிப்வரி மாதம் 20 ஆம் தேதி விளாத்திகுளம்-வேம்பார் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு வைத்து ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு விசாரணை, விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த வழக்கில் ஐகோர்ட் மகாராஜாவை ஆஜர்படுத்துவதற்காக பேரூரணி சிறையில் இருந்து ஆயுதப்படை போலீஸார் சண்முகம், சுவாதி ஆகியோர் பேருந்தில் அவரை அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் பேருந்தில் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து இறங்கினர். அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக மினி பேருந்துகள் நிற்கும் இடத்தில் காத்திருந்தனர். அப்போது திடீரென ஐகோர்ட் மகாராஜா மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை போலீசார் மீது தூவி, அவர்களை தாக்கிவிட்டு, தப்பி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் ஐகோர்ட் மகாராஜா மற்றும் அவர் தப்பி செல்ல உதவியதாக, அவரது மனைவி பிரியதர்ஷினி, அவரது உறவினர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து 3 தனிப்படை அமைத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தப்பி சென்ற ஐகோர்ட் மகாராஜா, மதுரைக்கு சென்று குஜராத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவரின் 14 வயது மகனை ரூ.2 கோடி கேட்டு கடத்தியுள்ளார். இந்த வழக்கில் ஈடுபட்டதாக முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார், அவருடைய கூட்டாளிகள் வீரமணி, காளிராஜ், அப்துல்காதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளியாக ஐகோர்ட் மகாராஜா இருப்பது தெரியவந்தது. அதேபோன்று சூர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இதனால் போலீசார் ஐகோர்ட் மகாராஜா, குஜராத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் சூர்யா குஜராத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து ஐகோர்ட் மகாராஜாவை பிடிக்க உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தூத்துக்குடி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி தனிப்படை போலீசார் 4 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்தனர். அவரை பிடிக்க முயன்ற போது அருவாளை காட்டி மிரட்டி அவர் தப்பி ஓட முயற்சித்த போது தவறி விழுந்தது அவரது இடது இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட் மகாராஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை சூரங்குடி அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு நகைகளை திருடியுள்ளார். அங்கிருந்து தப்பி சென்றவர் மதுரையில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா நடத்தி வந்த பியூட்டி பார்லர் மற்றும் பிட்னஸ் சென்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சூரங்குடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐகோர்ட் மகாராஜா போலீஸ் பிடியிலிருந்து தப்பிச்சென்று மதுரையில் 14 வயது சிறுவனை கடத்தி ரூ 2 கோடி கேட்டு மிரட்டி உள்ளார்.
இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்தார். அதே நேரத்தில் சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரிடம் இருந்து தப்பிக்க மொட்டை அடித்துக் கொண்டு சுற்றி திரிந்த ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சூர்யா தற்கொலைக்கான முழுமையான காரணங்கள் ஐகோர்ட் மகாராஜாவுக்கு தெரிய வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர். இதனால் குஜராத் மாநிலம் அகமதாபாத் செக்டர் 21 பிரிவு காவல் ஆய்வாளர் தமிழகத்துக்கு வந்து ஐகோர்ட் மகாராஜாவிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கிலும் மதுரை போலீசாரும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.