HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பிறந்தநாள் செய்தி ஒன்றை கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.?

சென்னை கோபாலபுரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது, தனது பிறந்தநாள் கொள்கை என அவர் குறிப்பிட்டது எதைப் பற்றி தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்.
“இந்தி திணிப்பை தடுப்பதே பிறந்த நாள் கொள்கை‘’
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பிறந்தநாளான இன்று(01.03.25), காலையிலேயே அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழிக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்பதே தனது பிறந்தநாள் செய்தி எனக் குறிப்பிட்டார்.
இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர்
இந்தி மொழி திணிப்பை தடுத்து, மாநிலத்தில் இருமொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கனவே இதுகுறித்து சமீப காலங்களில் நிறைய பேசியுள்ளார். இது குறித்து அவர், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றையும் எழுதி வருகிறார்.
அதில், இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம் என தெளிவாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என, அந்த கடிதத்தின் மூலம், தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்காக, அனைவருமே ஒற்றுமையாக போராட வேண்டும் என்றும் ஏற்கனவே முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
முதல் மோழிப்போரில் நாம் வெற்றி பெற்றாலும், இன்னமும் போர் நடந்துகொண்டுதான் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். இது இந்தி மொழி திணிப்பு மட்டுமல்ல என்று கூறியுள்ள அவர், இந்தியை முன்னே விட்டு, அதன் தொடர்ச்சியாக இந்த மண்ணை சமஸ்கிருதமயமாக்கும் சதித்திட்டத்துடன் மத்திய அரசு செயல்படுவதாகவும், இது தமிழ் பண்பாட்டின் மீது நடத்த நினைக்கும் படையெடுப்பு என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்
முன்னதாக, தனது பிறந்தநாள் வேண்டுகோள் எனக் கூறி, நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுகவினருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அதில், தமிழ்நாடு தற்போது உயிர்ப் பிரச்னையாக மொழிப்போரையும், உரிமைப் பிரச்னையாக தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதனால், இந்த முறை தனது பிறந்த நாளில், இந்த பிரச்னைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும், இந்தியாவிற்கே வழிகாட்டியாக போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் அந்த வீடியோவில் பதிவில் அவர் கூறியிருந்தார்.

