ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
இந்தி மொழி அவமதிக்கப்படுவதாகவும் ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அமைதி காப்பதாகவும் பாஜக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மும்மொழி கொள்கை வழியாக இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த விவகாரம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பெரும் பிரச்னையாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்தி மொழி அவமதிக்கப்படுவதாகவும் ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அமைதி காப்பதாகவும் பாஜக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பற்றி எரியும் இந்தி மொழி விவகாரம்:
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது , தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தேசிய கல்வி கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்தார். பலரின் தாய் மொழியை இந்தி அழித்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பெரும் பிரச்னையாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்தி மொழி அவமதிக்கப்படுவதாக பாஜக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் இந்த விவகாரத்தில் அமைதி காப்பதாக கூறியுள்ளன.
பாஜகவின் கேம்பிளான்:
ராஷ்ட்ரிய லோக் தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இந்தி மொழி மற்றும் புதிய கல்விக் கொள்கையை (NEP 2020) ஆதரித்தும் திமுகவின் இந்தி எதிர்ப்பை கண்டித்தும் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு வெளியே உள்ள சவுத்ரி சரண் சிங்கின் சிலைக்கு முன்னால் போராட்டத்தை நடத்தினர்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச அமைச்சரும் ராஷ்ட்ரிய லோக் தள எம்எல்ஏவுமான அனில் குமார் பேசுகையில், "சமாஜ்வாதி கட்சியின் நெருங்கிய நண்பர் மு.க. ஸ்டாலின், இந்தியை வெளிப்படையாக எதிர்க்கிறார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இந்த விஷயத்தில் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி, இந்தியை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு (திமுக) முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக ராஷ்ட்ரிய லோக் தளம் குரல் எழுப்பியது. ஆனால், இந்தியா கூட்டணியின் பெரிய கட்சிகளான ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்.
உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள். மாநிலத்தில் 24 கோடி மக்கள் இந்தி பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார். இந்தி மொழி விவகாரத்தை வைத்து இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக கூட்டணி கட்சிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

