50 லட்சத்தில் கட்டப்பட்டு பராமரிப்பின்றி உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம்
பல லட்ச ரூபாய் மதிப்பில் , கட்டப்பட்டு பராமரிக்கப்படாமல், பயனற்ற நிலையில் இருக்கும் மையத்தில், விரைவில் சிலைகள் வைக்கப்படவுள்ளதால், மையத்தை உடனடியாக சுத்தப்படுத்தி சீர் செய்திட கோரிக்கை
திருவலஞ்சுழி கபர்தீ்ஸ்வரர் கோயிலில் 50 லட்சத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்படாமல் காட்சியளிக்கும் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் விரைவில் சிலைகள் வைக்கப்படவுள்ளதால், மையத்தை உடனடியாக சுத்தப்படுத்தி சீர் செய்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோயில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆதிசேடன், திருமால், பிரம்மன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது. அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத்தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான். திருவலஞ்சுழி பலகணி மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் உள்வளாகத்தில் 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையம் பராமரிக்கப்படாமல் செடி கொடிகளுடன் காட்சியளிக்கின்றது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள சிலைகள் போதுமான பாதுகாப்பு இல்லாததால் ஏராளமான சிலைகள் திருட்டு போனது. இதனையடுத்து சிலை கடத்தல் பிரிவு போலீசார், திருட்டு போன சிலைகளை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும், பாதுகாப்பாற்ற நிலையிலுள்ள கோயில்களில் உள்ள சிலைகளை மீட்டு, பாதுகாப்பான மைத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உலோக திருமேனி பாதுகாப்பு மையம் என கோயிலின் மூலவர் சன்னதி அருகில் கட்டப்பட்டு, தற்போது திருடப்பட்ட சிலைகளை மீட்டு மையத்தில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர். கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிகமான கோயில்கள் இருப்பதால், மேலும் சில உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டப்படவேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி தலா 50 லட்சம் மதிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலிலும், திருநாகேஸ்வரம் கோயிலிலும் அனைத்து வசதிகளுடன், நவீன முறையில் பாதுகாப்பான வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து சிலைகளையும் அந்தந்த கோயில்களிலேயே பாதுகாப்பான வகையில் நவீன இரும்புகளை கொண்டு அமைக்கப்பட்டு வைக்க வேண்டும் என அப்போது அரசு உத்தரவிட்டது. இதனால் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் கட்டப்பட்ட உலோக திருமேனி பாதுகாப்பு மையம் பராமரிக்கப்படாமல் இருப்பதால்,மையத்தை சுற்றிலும் முள் செடிகள், கொடிகள், மரங்களை முளைத்து உள்ளே செல்ல முடியாதளவிற்கு காட்சியளிக்கிறது.
மேலும் இரவு நேரங்களில் விஷஜந்துக்கள், பாம்புகள் உள்ளிட்டவைகள் நடமாட்டம் உள்ளதால், கோயில் பணியாளர்கள் மையத்தின் அருகில் செல்வதற்கே அச்சப்பட்டு செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி, கும்பகோணம் பகுதிக்கு வந்து, நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு, மேலும் சில சிலைகள் வரவுள்ளது என தெரிவித்தார், பின்னர் கோயில் அலுவலர்கள் மற்றும் போலீசாரிடம் சில கட்டளைகளை தெரிவித்தார்.
பின்னர், திருவலஞ்சுழியிலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில், கூடுதலாக சிலைகள் வரவுள்ளதால், அம்மையத்திற்கு இரண்டு போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், தற்போது இரண்டு போலீசார், மையத்தின் எதிரில் பணியில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், பல லட்ச ரூபாய் மதிப்பில் , கட்டப்பட்டு பராமரிக்கப்படாமல், பயனற்ற நிலையில் இருக்கும் மையத்தில், விரைவில் சிலைகள் வைக்கப்படவுள்ளதால், மையத்தை உடனடியாக சுத்தப்படுத்தி சீர் செய்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.