கும்பகோணத்தில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்த கரும்பு விவசாயிகள் - நடந்தது என்ன?
கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்: திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்திற்கு இன்னும் முற்றுப்புள்ளி விழாத நிலையில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைவி்க்கும் கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவை தொகை முழுவதையும் வழங்க வேண்டும்.
விவசாயிகள் பெயரில் வாங்கி கடன்
விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து சிபில் ஸ்கோர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். சர்க்கரை ஆலை நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் கோரிக்கை மனுக்களையும் அளித்து வருகின்றனர்.
வாக்காளர் அடையாளர் அட்டை ஒப்படைப்பு
போராட்டத்தினை தொடர்ந்து 485-வது நாளாக சங்க ஆலை மட்டக்குழுச் செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். முன்னதாக நீதிபதிகள் குடியிருப்பு வாசலில் இருந்து வாக்காளர் அடையாள அட்டையை கையில் ஏந்திய படி கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. எனவே அதிகாரிகளிடம் அளித்து செல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கோரிக்கை மனு
இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கவேண்டும். இல்லையென்றால் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்றனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கேட்டுகொண்டதற்கு இணங்க தங்கள் கோரிக்கை மனுக்கை அங்கிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.
விவசாயிகள் கருத்து
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கையில், கோட்டாட்சியரிடம் எங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக வந்ததோம். போலீசார் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அமைதியாக செல்ல கேட்டுக் கொண்டனர். இதனால் கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுவிட்டு வந்துள்ளோம். இதற்கும் நடவடிக்கை இல்லை எனில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.