தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கேட்டு பட்டுக்கோட்டையில் விவசாயிகள் நூதன போராட்டம்
அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்: தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கேட்டு, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தேங்காயை உடைத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கேட்டு, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய அளவில், தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.செல்வம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் கண்டன உரையாற்றினார்.
தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.சி.பழனிவேலு, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தென்னை விவசாயம் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர். அரங்கசாமி, மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், ஏ.எம்.வேதாச்சலம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர்கள் கே.பாலசுப்பிரமணியன் (பட்டுக்கோட்டை), கோவிந்தராஜ் (திருவோணம்), வி.ஆர்.கே.செந்தில்குமார் (சேதுபாவாசத்திரம்), சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி (பட்டுக்கோட்டை), எஸ்.கோவிந்தராஜ் (ஒரத்தநாடு), வீ.கருப்பையா உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
போராட்டத்தில், "கட்டுப்பாடு இல்லாமலும், தரமற்ற, தாராள இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும். கொப்பரை கிலோ ஒன்றுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அளித்து ரூபாய் 140 விலை நிர்ணயித்து, அதிக நிதி ஒதுக்கி, ஊழல் இல்லாத கொள்முதலை, ஆண்டுதோறும் செய்ய வேண்டும்.
உரித்த முழு தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 விலை நிர்ணயம் செய்து, கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய வேண்டும்.
சத்துணவில் காலை உணவுத்திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். தென்னையை தோட்டக்கலை துறைக்கு மாற்ற வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து, இயந்திரங்கள் முழு மானியத்துடன் வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழிற்சாலைகளை தஞ்சை மாவட்டத்தில் துவங்க வேண்டும்" என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தென்னை விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கஜா புயலுக்கு பின்னர் பெரும் பாடுபட்டு தென்னை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேங்காய்க்கு சரியான கொள்முதல் விலை கிடைப்பதில்லை. இதனால் தென்னை விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். தென்னை சார்ந்த தொழிற்சாலைகளும் தஞ்சை பகுதியில் இல்லை. எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகதான் இந்த தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.