ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுங்கள்: ஜனாதிபதிக்கு பறந்த மனு: மதச்சார்பற்ற கூட்டணி எம்.பிக்கள் அதிரடி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி அலுவலகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி அலுவலகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும், எனவே ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் மாநிலம் மற்றும் மாநில மக்கள் தொடர்பான அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கவனத்தைக் கோரி, கீழே கையொப்பமிட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கடிதத்தை அனுப்புகிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாகத் தெரிவிக்கிறது. எனினும், பெயரளவில் மட்டுமே மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். ஏனென்றால் ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புக் கருவியின் ஓர் அச்சாணி ஆவார்.
மக்களுக்கு ஆளுநர் என்பவர் "வழிகாட்டியாக, ஒரு தத்துவாசானாக, நண்பராக" விளங்க வேண்டும் என்றே அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் கருதினர். முக்கியமான அரசமைப்புச் சட்டப் பணிகளைச் செய்ய வேண்டிய ஆளுநரானவர் தனது கடமையில் ஒரு சார்பற்றவராகவும், நேர்மையானவராகவும், மிகச் சரியானவராகவும் இருக்க வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உயிரோட்டம் என்பது மக்களாட்சிதான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிறுவத்தான் நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்துத் தங்கள் உயிரை ஈந்தார்கள்.
ஆளுநராக இருப்பவர் அரசியலமைப்பின்பாலும் அதுகுறித்து நிற்கும் மதிப்புகளின்பாலும் முழு நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. நமது அரசியலமைப்பின் மதிப்புகள் முகவுரையில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
அதாவது, இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்பதாகும். அதில் கூறப்பட்டுள்ளவற்றுள் ஏதாவது ஒன்றில் நம்பிக்கையில்லாத ஓர் ஆளுநர் அத்தகைய அரசியலமைப்பின் பெயரிலான பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் ஆகிறார். மேலும், அரசியல் சார்புத்தன்மை கொண்டவராக ஒரு ஆளுநர் மாறுவாரேயானால் - அந்தப் பதவியில் அவர் தொடரும் தகுதியை இழந்து விடுகிறார்.
அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை அவரது பெயரிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் அரசமைப்பு கொள்கையளவிலும் சட்டத்தை செயல்பாட்டளவிலும் மீறியதும் மக்களாட்சிக்குச் எதிர்ப்பது சாவுமணி அடிப்பதுமான செயலாகும்.
அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அறிஞர்கள் ஒரு நாளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றித் தாமதப்படுத்துவதையோ, மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அத்தகைய சூழலை எதேச்சாதிகாரம் என்றே குறிப்பிட முடியும். ஆளுநரின் செயலால் அத்தகைய ஒரு சூழல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
தாங்கள் நன்கறிந்தபடியே, 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ்நாட்டை சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுப் பாதையில் முன்னகர்த்திச் செல்வதற்கான ஆட்சியுரிமையை மாநில மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு இரவும் பகலும் மக்களுக்காக உழைத்து, மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.
எனினும், தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலந்தாழ்த்துவது (விவரங்கள் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன) என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அரசியல் சட்டப் பிரிவு 156 (1) இன்படி, குடியரசுத் தலைவர் விரும்பும் வரையில் ஆளுநர் தனது பதவியில் நீடிப்பார். ஆகவே, தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.