உயிரை கொடுத்து காப்பாற்றிய நர்ஸ்.. வயநாடு நிலச்சரிவின் ரியல் ஹீரோ.. கெளரவித்த தமிழக அரசு!
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் சபீனா, நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வதற்காக ஜிப்லைனில் பயணம் செய்து 35க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றினார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டதற்காக செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்பட்டது.
பேரழிவை ஏற்படுத்திய வயநாடு நிலச்சரிவு: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையும் சோக கடலில் மூழ்கடித்தது. இந்த இயற்கை பேரழிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வயநாடு நிலச்சரிவில் மரணம் அடைந்தவர்கள் தொடர்பாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துயரம் நிறைந்த கதைகளுக்கு மத்தியில் நம்பிக்கையின் ஒளியாக திகழ்ந்த செவிலியர் ஒருவர், தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பலரை காப்பாற்றி நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் சபீனா, நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வதற்காக ஜிப்லைனில் பயணம் செய்து 35க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றினார். துணிச்சலாக செயல்பட்ட அவருக்கு தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
உயிரை பணயம் வைத்த செவிலியர்: 78வது சுதந்திர தின விழாவில் சபீனாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் கல்பனா சாவ்லா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சபீனா, "ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் வயநாட்டில் செவிலியர்கள் தேவைப்படுவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உள்ள எனது சக ஊழியர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து, நான் உடனடியாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு புறப்பட்டேன். எந்தளவுக்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது, உடல்கள் எப்படி சிதறிக் கிடக்கிறது, வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளை தொலைக்காட்சியில் நான் பார்த்தேன். ஆனால், அங்கு செல்வலிருந்து அது என்னைத் தடுக்கவில்லை. என்னால் முடிந்த உதவியைச் செய்ய விரும்பினேன்" என்றார்.
முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில்தான், மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்த தடமே தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளன. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணிகள் நடைபெற்றன.