Tahsildar Dies: அதிர்ச்சி.. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் கோப்பை போட்டி:
இன்று அரசு அலுவலர்களுக்காக நடைபெற்ற இறகு பந்து போட்டியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலங்கை தமிழர் நலன் தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த தருமபுரி அடுத்த ஏலகிரியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த அதியமான்(53) என்பவர், மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டு, பாலகோடு அரசு மருத்துவமனையில் நுரையீரல் நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் செந்தில்குமார் ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர் .
அப்போது வட்டாட்சியர் அதியமான் சோர்வாக இருந்ததால், இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்பொழுது குனிந்து தனது தொலைபேசியை எடுக்கும் போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு:
இதையடுத்து டாக்டர் செந்தில்குமார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் நாடி துடிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து விளையாட்டரங்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வரும், வட்டாட்சியர் அதியமானின் மனைவி தங்க மீனாட்சி மற்றும் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆட்சியர் ஆறுதல்:
அதியமான் உடல் தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது அதியமான் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வட்டாட்சியர் மனைவிக்கு, ஆட்சியர் ஆறுதல் கூறினார்.
அப்பொழுது உயிரிழந்த வட்டாட்சியர் அதியமான் உடலை கண்டு அவரது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் அரசு அதிகாரிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: விமான நிலையம் வர லேட்; வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்ட பயணி - பொறிவைத்து பிடித்த போலீஸ்