Sanitary Worker Retirement Celebration: பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளருக்கு மகுடம் சூட்டி பிரியாவிடை கொடுத்த அதிகாரிகள்
39 ஆண்டுகளாக சேலம் மாநகராட்சி 34 வது வார்டில் தூய்மை பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பிரியாவிடை கொடுத்தனர்.
சேலம் மாநகராட்சியில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அதிகாலை நேரத்தில் சாலைகளையும், தெருக்களையும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகர் அம்மாபேட்டை மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்தவர் ருக்மணி. இவர் கடந்த 39 ஆண்டு காலம் அயராத உழைத்து அதிகாரிகள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இடத்தில் நற்பெயரை பெற்றுள்ளார். தன்னுடைய குடும்பத்தினரையும் செல்வ செழிப்போடு உருவாக்கி இன்று ஓய்வு பெற்ற ருக்மணி என்ற தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் விழா எடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினர்.
சேலம் மாநகராட்சி 34 கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுக்கு இணையாக தூய்மை பணியாளர் அமர்த்தி அவரது பணியினையும், சிறப்புகளையும் நடவடிக்கைகள் குறித்த எண்ணத்தையும் வெளிப்படுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் வேடியப்பன், ஹரி கணேஷ், சுரேஷ், சமூக ஆர்வலர் குணசேகரன் ஆகியோர் புகழாரம் சூட்டினார்.
எத்தனையோ விழாக்கள் நடத்திய அனுபவம் அதிகாரிகளுக்கு இருந்தாலும் இது போன்ற தூய்மை பணியாளருக்கு விழா எடுத்தது தங்களுக்கு முதல் அனுபவமாக உள்ளதாகவும் அதிகாரிகள் பெருமைப்பட்டுக் கொண்டனர். இதற்கு சற்று ஒரு படி மேல் தங்கள் பகுதியில் சிறப்பான முறையில் தூய்மை பணியை மேற்கொண்டு அதன் மூலம் தனக்கு மக்களிடம் நற்பெயர் எடுத்துக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ மகுடம் சூட்டி சந்தன மாலை அணிவித்து மகிழ்ச்சிப்படுத்தினார். அதோட நில்லாமல் மண்டல குழு தலைவர் தனசேகரன் அவருடைய தாய்க்கு எடுத்த பட்டுப்புடவையை இன்று ஓய்வு பெறும் தூய்மை பணியாளரை தனது தாயாக நினைப்பதாக கூறி அவருக்கு அணிவித்து அழகு பார்த்தார்.
தொடர்ந்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் உற்றார் உறவினர்கள் ஓய்வு பெறும் ருக்மணி அம்மாவுக்கு சால்வை அணிவித்தும் பரிசு வழங்கியும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். மேலும் அவரது பணி குறித்து உடன் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பாராட்டு தெரிவித்து விடை கொடுத்தனர். ஒட்டுமொத்த விழாவில் பங்கேற்ற அனைவரும் இந்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ருக்மணி அம்மாள் ஆனந்த கண்ணீர் வடித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தனது சொந்த காரில் தூய்மை பணியாளரை அமர வைத்து அழகு பார்த்து அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பிரியா விடை கொடுத்துவிட்டு வந்த கவுன்சிலரின் செயலை மற்ற தூய்மை பணியாளர்களும் வெகுவாக பாராட்டினர். இதுபோன்று நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் மற்ற தூய்மை பணியாளர்களும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை கடமையாக சிறப்பாக செய்து முடித்தால் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.