"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
"ஒருவர் கூட மதம் மாறக் கூடாது, மதம் மாறியவர்கள் இந்து மதத்திற்கு வர வேண்டும்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் இனி ஒருவர் கூட மதம் மாறக் கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, "இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்னை. இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை.
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்"
நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன். அடிப்பேன். இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.
மொழி, ஆன்மீகம், இலக்கியம் சேர்ந்தது தமிழ். மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு; கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது 5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன்; அந்த பழமையோடு வாழ விடுவார்களா?; செல்பி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழிக்கிறார்.
முருகன் பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை பேச்சு:
கந்த சஷ்டி கவசத்தில் அறிவியலும், விஞ்ஞானமும் உள்ளது; ஒருவர் கூட மதம் மாறக் கூடாது, மதம் மாறியவர்கள் இந்து மதத்திற்கு வர வேண்டும். முருகனை வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்று தமிழக அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் 18 மஹா புராணங்களில் மொத்தம் 95,000 ஸ்லோகங்கள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு ஸ்கந்த புராணத்தில் மட்டும் 1 லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன" என்றார்.
பின்னர் பேசிய தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், "முருகா முருகா என்று சொன்னால் உருகாதோர் யாரும் இல்லை. முருகா எனும் பெயரில் மெல்லினம், இடையினம், வல்லினம் இருப்பதால் முருகனை தமிழ் கடவுள் என சொல்கிறோம்.
மதுரை மண்ணில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது நமக்கெல்லாம் பெருமை; ஒருமித்த கலாச்சாரங்கள் மாறிவிடக்கூடாது என்பதற்காக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியைத்தான் படிக்க சொல்கிறோம்; தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் ஒரே கலாச்சாரம், பண்பாடு ஒருமித்த கலாச்சாரங்கள் மாறிவிடக்கூடாது என்பதற்காக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது" என்றார்.






















