எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி
திமுக மற்றும் ராமதாஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேச்சு அடிபடும் நேரத்தில் பாமக MLA அருள் அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து 35 நிமிடங்கள் பேசியுள்ளார். சேலத்திற்கு அன்புமணி வரும் போது அவரை அருள் சந்திக்காததை வைத்து பாமகவினர் கொந்தளித்து வருகின்றனர்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் நடந்து வருகிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியதில் இருந்து பிரச்சனை பெரிதாகியது. இருந்தாலும் அய்யா காட்டிய வழியில் பயணிப்போம் என அன்புமணி சொல்லி வருகிறார். இருவரது பிரச்னையும் தாண்டி பாமகவினரே 2 தரப்பாக பிரிந்து அடித்துக் கொள்கின்றனர்.
இந்த நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் ஆசைப்படுவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அப்பாவின் பேச்சை கேட்டு அன்புமணி நடக்க வேண்டும் என ராமதாஸ்-க்கு சப்போர்ட்டாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியதன் பின்னணியிலும் அந்த காரணமே இருப்பதாக சொல்கின்றனர். அதுவும் பாமகவில் நடக்கும் குழப்பத்திற்கு திமுகவின் சூழ்ச்சி காரணம் என அன்புமணி கைகாட்டிய போது அதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில் அமைச்சர் எ.வ. வேலுடன் சட்டமன்ற உறுப்பினர் அருள், சந்தித்து 35 நிமிடங்கள் பேசியுள்ளார். திமுக சார்பாக எ.வ.வேலு தான் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். அதனால் கூட்டணி தொடர்பாக அன்புமணியை கலந்தாலோசிக்காமல் பேச்சுவார்த்தை நடக்கிறதா என பாமகவினரே போர்க்கொடி தூக்குகின்றனர். இருவருக்கும் இடையில் பிரச்னை ஆரம்பமானதில் இருந்தே அருள் ராமதாஸ் பக்கமே நிற்பது அன்புமணி ஆதரவாளர்களுக்கு எரிச்சலை கொடுத்துள்ளது.
நேற்று அன்புமணி சேலத்தில் கூட்டம் நடத்திய நிலையில், அருள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள், அன்புமணி கிளம்பிய பிறகே வீட்டிற்கு வந்ததாக சொல்கின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தும் பாமகவினர், ‘நீங்கள் அய்யா மற்றும் சின்னையா இருவரும் இரு கண்கள் என்று கூறுகின்றீர்கள். அதை நாங்கள் வரவேற்கின்றோம். நடுநிலையாக இருக்கும் நீங்கள் ராமதாஸை சென்று பார்த்தது போல, அன்புமணியை ஏன் சென்று பார்க்கவில்லை? உங்களை தடுப்பது யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படும் நேரத்தில், அன்புமணியை கண்டுகொள்ளாமல் அருள், எ.வ.வேலுவை சந்தித்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




















