(Source: ECI/ABP News/ABP Majha)
சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை; 56.45 கிலோ பழைய இறைச்சிகள் அழிப்பு
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய இரண்டு உணவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள உணவு கடைகளில் தரமான உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்றும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காலாவதியான உணவுகளை அளிப்பதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, ஓமலூர், வாழப்பாடி, நங்கவள்ளி, சேலம் மாநகர் மூன்று ரோடு, அஸ்தம்பட்டி, தாதகாபட்டி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 69 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 கடைகளில் இருந்து, பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மட்டன் மற்றும் சிக்கன் 56.45 கிலோ கிராம், மற்ற இதர உணவு பொருட்களான பிரியாணி, இட்லி, சட்னி, சாதம், நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் - 19.45 கிலோ என மொத்தமாக 75.9 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் - 11.1 கிலோ கிராம் மற்றும் பான்மசாலா, குட்கா 1.350 கிலோ பறிமுதல் 8 உணவு நிறுவனங்களுக்கு ரூபாய் 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஓமலூரில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய இரண்டு உணவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
இதேபோன்று சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சேலம் மாநகர சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், அழகாபுரம், பேர்லாண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தரமற்ற முறையில் இருந்த சவர்மா மற்றும் சிக்கன், மட்டன் உள்ளிட்ட 182 கிலோ இடையிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவுகள் விற்பனை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
சேலம் மாநகரப் பகுதிகளில் இரண்டாவது நாள் சோதனையில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட பிரபலமான கடைகளில் பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 182 கிலோ சிக்கன் மற்றும் மட்டன், 17 கிலோ சமைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி சாப்பாடு, 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 500 கிராம் மயோனிஸ், 300 கிராம் உணவு நிறைவூட்டி, 2 கிலோ ஷவர்மா, சிக்கன் உள்ளிட்டவைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை உடனடியாக அளித்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தரமற்ற உணவுகள் வைத்திருந்ததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மூன்றாவது நாள் சோதனையில் பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சிக்கன் - 200 கிலோ, ப்ரைடு சாதம் - 21 கிலோ, செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட சிக்கன் பிரியாணி - 10 கிலோ, மயோனைஸ் - 5.3 கிலோ, செயற்கை நிறமூட்டிகள் - 800 கிராம், தயார் செய்யப்பட்ட மசாலா - 8 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் - 4 கிலோ என மொத்தமாக 249.100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. இதில் 15 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 3 ஹோட்டல்களுக்கு தலா ரூ. 6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் 500 கிலோவிற்கும் மேற்பட்ட பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.