Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராக சுனிதா கெஜ்ரிவால் தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி செய்து வருகிறார்.
பதவியை ராஜினாமா செய்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
மக்களுக்கு சொல்ல வருவதை, தன் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தெரியப்படுத்தி வருகிறார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் வாட்ஸ் - அப் எண்ணில் தங்களின் ஆதரவு தெரிவிக்கும்படி சுனிதா கெஜ்ரிவால் இன்று வீடியோ மெசேஜ் வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில், ஆம் ஆத்மி கட்சி மீது பாஜக காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. முதலமைச்சர் பதவிக்கு சுனிதா கெஜ்ரிவால் தயாராகி வருவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
சிறையில் இருந்தபடியே அரவிந்த் கெஜ்ரிவாலால் ஆட்சி செய்ய முடியவில்லை என்றால், வேறு ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல், கெஜ்ரிவாலாலின் இருக்கையில் அமர்ந்தபடி, கெஜ்ரிவால் சொல்ல வருவதை மக்களுக்கு எடுத்து சென்று வருகிறார் அவரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால்.
இப்படிப்பட்ட சூழலில், சுனிதா கெஜ்ரிவால் பற்றி தெரிந்து கொள்வோம்.
யார் இந்த சுனிதா கெஜ்ரிவால்?
- முன்னாள் ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) அதிகாரியான சுனிதா கெஜ்ரிவால் வருமான வரி துறையில் (Income Tax) 22 ஆண்டுகளாக பணியாற்றினார்.
- யுபிஎஸ்சி தேர்வில் தேர்வானதை தொடர்ந்து, போபாலில் நடந்த பயிற்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். சுனிதா, 1994 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி ஆவார். கெஜ்ரிவால், 1995 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி ஆவார்.
- 58 வயதான சுனிதா கெஜ்ரிவால், கடந்த 2016ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். கடைசியாக, டெல்லியில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) வருமான வரி ஆணையராகப் பணியாற்றினார்.
- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற இயக்கம் தீவிரமாக இயங்கி வந்தது. அந்த இயக்கத்துடன் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக செயல்பட்டார். அந்த சமயத்திலும், ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட காலத்திலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் உறுதுணையாக இருந்தார்.
- கடந்த 2014 மக்களவை தேர்தலில் வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக கெஜ்ரிவால் போட்டியிட்டபோது, அவருக்கு உதவியாக இருக்கும் நோக்கில் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்தார்.
- கடந்த 2015 ஆம் ஆண்டு, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து போட்ட முதல் ட்வீட்டிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவை பற்றி குறிப்பிட்டிருந்தார். "எப்போதும் தன்னுடன் இருந்ததற்காக நன்றி சுனிதா" என்று பதிவிட்டிருந்தார்.