Seeman: "அதெப்படி ஒன்னு ஆகும்? கூட்டணி சேரவே முடியாது" விஜய் பேச்சால் சீமான் அப்செட்!
தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றாக முடியாது என்றும், விஜய் முதலில் தனித்து நின்று செல்வாக்கை காட்ட வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேறறு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற இந்த முதல் மாநாட்டில் த.வெ.க.வின் அரசியல் கொள்கைகள், நிலைப்பாடு ஆகியவற்றை விஜய் அறிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்திட்டங்கள் குறித்தும் அறிவித்தார்.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றாகாது:
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தவெக-வின் கொள்கைகள், விஜய்யின் திட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பேசியதாவது, “ விஜய்யின் கொள்கை கோட்பாடும், எங்களது கொள்கை கோட்பாடும் ஒத்துப்போகவில்லை. நான் சொன்னது நீண்டகால இன வரலாறு, இனப்பிரச்சினை, இங்க இருக்கது பிரச்சினைக்கு தீர்வாக இந்திய தேசிய, இந்திய திராவிட அரசியலுக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள்.
கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று நான் வரவில்லை. நான் படமெடுக்க வேண்டும் என்று வந்தேன். காலம் எனக்கு இந்த பணியை கையில் கொடுத்துவிட்டது. காரணம் என் இனச்சாவு. எனக்கு கையில் கொடுத்த பணியைச் செய்கிறேன். அவருடைய கொள்கை திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று தம்பி சொல்கிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றாகிவிடாது. அது வேறு. இது வேறு.
ஏற்க முடியாது:
தெலுங்கு தேசம் என்று என்.டி.ஆர். வைத்தபோது அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. நாங்கள் தமிழ் தேசம் என்று வைத்தபோது அதை பாசிசம் என்று கூறுகிறார்கள். அது ஏற்புடையது அல்ல. எங்களுடைய கொள்கை தமிழ் தேசியம். விஜய்யின் அழைப்பை வேடிக்கையாக பார்ப்பார்கள். விஜயகாந்த் தனித்து நின்று மக்கள் செல்வாக்கை காட்டினார்.
விஜய் முதலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று மக்கள் தனக்கு இந்தளவு செல்வாக்கைத் தருகின்றனர் என்று முதலில் வலிமையை நிரூபிக்க வேண்டும். விஜய் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று தனது செல்வாக்கை காட்டினார். திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறேன் என்பதை ஏற்க முடியாது. கொள்கைகளில் உடன்பாடு இல்லாமல் கூட்டணி சேர முடியாது.”
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தொடக்கத்தில் இருந்தே பெரிதும் வரவேற்று வந்தவர் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் தமிழ் தேசியத்தை முன்னெடுத்து திராவிட சித்தாந்தத்தை எதிர்த்து அரசியல் கட்சியை நடத்தி வரும் சூழலில், விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் தனது இரு கண்கள் என்று கூறியுள்ளார். மேலும், விஜய்யுடன் சீமான் கூட்டணி சேர்வாரா? என்று கேள்வி எழுந்து வரும் சூழலில் விஜய் – சீமான் இடையே கொள்கை முரண்பாடு ஏற்பட்டிருப்பதால் இந்த கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.