Karthi Chidambaram: ”வேடிக்கையா இருக்கு” ஈ.வி.கே.எஸ் எனது முழு உரையை கேட்டாரா? - கார்த்தி சிதம்பரம்
Karthi Chidambaram Reply to EVKS: கூட்டணிக்கு எதிராக சுயநலமாக பேசி வருவதாக ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் தெரிவித்த நிலையில், கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
Karthi Chidambaram Reply to EVKS: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளே முரண்பாடான கருத்துகள் வருவதை பார்க்க முடிகிறது.
எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் சர்ச்சையான பேச்சு:
சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேசியதாவது, தேர்தலில் கூட்டணி வைத்த என்ற ஒரே காரணத்தால், தேர்தல் இல்லாத காலத்தில் மக்களின் பிரச்னைகளை பேசாத காரணத்தினால்தான், மக்கள் புதிதாக வரும் கட்சிகளை நோக்கி நகர்கிறார்கள். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரம் , என்கவுண்டர் விவகாரம் குறித்து, திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாக பேசியது, திமுக மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில், நேற்றைய தினம் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் ABP நாடு-வுக்கு பிரத்யேகமாக தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார்.
அவர் அளித்த பேட்டியில், கார்த்தி சிதம்பரம் மந்திரி சபையில் இடம் வேண்டும் என்கிறார்,எப்படி சரியாக வரும். திமுக கூட்டணியில் இருப்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, மோடி, நாட்டை பிரிக்க பார்க்கிறார், பாஜக உள்ளிட்ட பாசிச சக்திகளை அழிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவே, இதை நோக்கி நாம் பயணித்து வரும்போது, கூட்டணிக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மக்களவை தேர்தலில், திமுகதான் வேலை செய்தது, வெற்றி பெற்றதே திமுகவினால்தான். இந்த நிலையில், இதுபோன்ற பேச்சு தவறாகும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே திமுகதான். திமுக தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உடன் பிறவா சகோதரர் போல பழகி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையேயான கொள்கையானது, பாசிச- மதவெறி கொண்ட சக்திகளை எதிர்ப்பதாகும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு இடைஞ்சல் வருகிற மாதிரி செயல்களை செய்யக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
முழு பேட்டி: EVKS Elangovan Exclusive: கார்த்தி சிதம்பரம் சுயநலவாதி; துரோகம் செய்கிறார்- ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
வேடிக்கையா இருக்கு!
இந்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது,என்னை நீக்க சொல்லியிருக்காரா? வேடிக்கையாக இருக்கு, சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்பு பேசியதற்காக, தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது.
என்னுடைய முழு உரையை கேட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட அரசியல் பயணத்தில், நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்திருப்பார். அதனால், அவருடைய கருத்துக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
முரண்பாடு:
திமுக மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே முரண்பாடு அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கிடையே முரண்பாடான கருத்துகள் எழுந்து வருவது தமிழ்நாட்டு அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.