China, Canada Complaint: ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி குறித்து, சீனாவும், கனடாவும் உலக வர்த்தக மையத்தில் புகாரளித்துள்ளன. இதனால், ட்ரம்ப்பின் ஆட்டம் குளோசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு அதிரடியாக கூடுதல் வரியை விதித்தார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும், கனடாவும் அமெரிக்காவுக்கு பதில் வரியை விதித்தன. இப்படி ஒருபுறம் வர்த்தகப் போர் நடைபெற்றுவரும் நிலையில், சீனாவும், கனடாவும், உலக வர்த்தக மையத்தின் உதவியை நாடியுள்ளன.
கூடுதல் வரியை போட்டுத்தாக்கிய ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அந்த வரி விதிப்பு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதேபோல், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 10 சதவீத கூடுதல் வரி, அதாவது 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையும் நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
பதில் வரி விதித்து பதிலடி கொடுத்த கனடா, சீனா
இதையடுத்து, கனடாவும் அமெரிக்காவிற்கு பதில் வரியை விதித்தது. மொத்தமாக, அமெரிக்காவின் 155 பில்லியன் டாலர்கள் அளவிற்கான பொருட்கள் மீது வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வருவதாகவும் கனடா பிரதமர் தெரிவித்தார். அதோடு, மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி விதிப்பு, 21 நாட்களுக்குப்பின் அமல்படுத்தப்படும் என அறிவித்தார் ட்ரூடோ.
இதேபோல், சீனாவும், அமெரிக்க விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. சோயாபீன்ஸ், அரிசி, பன்றி மற்றும் மாட்டிறைச்சி, பால் பொருட்கள், நீர் பொருட்கள், காய்கறி, பழங்கள் மீதான இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோதுமை, சோளம், பருத்திப் பொருட்கள், கோழி ஆகியவற்றின் இறக்குமதி மீது 15 சதவீத வரியையும் விதித்துள்ளது சீனா. இது மட்டுமல்லாமல், 25 அமெரிக்க ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பிடம் புகாரளித்த சீனா, கனடா
அமெரிக்காவிற்கு பதில் வரி விதித்ததோடு நிற்காமல், உலக வர்த்தக அமைப்பிலும், சீனா, மற்றும் கனடா நாடுகள் புகாரளித்துள்ளன.
அமெரிக்காவின் ஒருதலைபட்ச வரி நடவடிக்கைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளது என சீன வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கை, சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்த ஒத்துழைப்பின் அடித்தளத்தையே அசைத்துப் பார்ப்பதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி இதை எதிர்கொண்டு, சீனா அதன் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியாக பாதுகாக்கும் எனவும் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், அமெரிக்காவின் நடவடிக்கையை ஊமை வர்த்தகப் போர் என கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்விரு நாடுகளும் தற்போ உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்துள்ள நிலையில், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன. மேலும், அந்த நடவடிக்கை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறது என்பதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படியுங்கள்: Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?

