Bengaluru Pugalendhi: நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி மாபெரும் வெற்றிபெறும் - பெங்களூர் புகழேந்தி
ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக புகழேந்தி பேட்டி.
சேலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் அதிமுக ஓபிஎஸ் அணி ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, சென்னையில் வருகின்ற 20 ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. கூட்டணி மற்றும் பிரச்சாரங்கள் குறித்து பரபரப்பான அறிவிப்பை ஓபிஎஸ் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை கண்டு பொறுக்கமுடியாமல் பணம் கொடுத்து, எடப்பாடி பழனிசாமி மதுரையில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். பன்னீர்செல்வம் தலைமையில் அமையும் கூட்டணி வெற்றிபெறும் கூட்டணி குறித்து பல்வேறு கட்சியினர் ஓபிஎஸ்யிடம் பேசி வருகின்றனர். பாஜக முடிவு குறித்து கவலையில்லை, வெற்றி கூட்டணி ஓபிஎஸ் தலைமையில் தான் அமையும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கட்அவுட் டீம்மாக எடப்பாடி பழனிசாமியின் அணி செயல்பட்டு வருகிறது. மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் காவல்துறை அனுமதி பெறாமல், நீதிமன்ற உத்தரவை மீறி கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் யார் முதல்வர் என்று குழப்பமடையும் வகையில் இந்த கட்அவுட்டுகள் உள்ளது, இதுகுறித்து தமிழக டிஜிபியிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரத்தை திசை திருப்பவே சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். மறைந்த தலைவர்கள் குறித்து விட்டுவிட வேண்டும். இது தவறான அரசியல் ஆகும். அப்போது இருந்து வேடிக்கை பார்ப்பதை மட்டுமே எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வு தற்கொலைகள் மற்றும் மணிப்பூர் விவகாரம் என அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தான் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் உள்ள தென் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்படுவது சரியான ஒன்றுதான் என்றும் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் தோல்வியை தழுவினர் 12 உள்ளாட்சி பதவிகள் ஒரு அமைச்சர் கையில்தான் இருந்தது. இந்த பதவிகளை பயன்படுத்தி நிறைய பணம் கொள்ளையடித்துவிட்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி மாபெரும் வெற்றியை பெறுவோம், ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு ஆதரவாக செயல்படுவோம். தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவிற்கு இடையே தகராறு எதுவுமில்லை. ஆனால் ஆளும் கட்சியினருக்கும், ஆளுநருக்கு இடையே தான் தகராறு இருந்து வருகிறது. ஆளுநர் ஆளுநராகவே செயல்பட வேண்டும், முதலமைச்சர் முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்தாக உள்ளது. அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு ஏன் செல்லாமல் இருக்கிறோம் என்பது குறித்து பேசியவர். வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு செல்லாமல் உள்ளதாக என்று விளக்கமளித்தார்.