‘திமுகவிற்கு தேதி குறிக்கணும்’ - பணியை தொடங்கிய அன்புமணி! அமாவாசை சென்டிமென்ட் ..!
Anbumani "சென்னை பனையூரில் அன்புமணி ராமதாஸ் புதிய அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் "
தமிழ்நாட்டில் மிக முக்கிய கட்சிகளில், ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அரசியலில் பங்கு எடுத்த நாளிலிருந்து, தனது பலமான வாக்கு வங்கி மூலம் தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறது. பாமக தொடர் தோல்விகளை சந்தித்தாலும், அதன் வாக்கு வங்கியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வருகிறது.
பாமகவின் தற்போது தலைவராக அன்புமணி இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், இளைஞர் அணி தலைவர் நியமனம் செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அடுத்த நாளே அந்த பிரச்சனைக்கு பாமக முற்றுப்புள்ளி வைத்தது.
அன்புமணி தீடீர் ஆலோசனை
வாக்குவாதம் ஏற்பட்ட மேடையில் அன்புமணி ராமதாஸ், சென்னை பனையூர் பகுதியில் தனி அலுவலகம் திறந்து இருப்பதாக அறிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் நேற்று அன்புமணி ராமதாஸ், சென்னை பனையூர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்கள் அன்புமணியை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அலுவலகம் எதற்கு ?
இந்த திடீர் ஆலோசனை தொடர்பாக பாமக வட்டாரங்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம்: ஏற்கனவே அவர் நிர்வாகிகளை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வந்தார். இந்தநிலையில் அந்த அலுவலகத்தை முழு நேர அலுவலகமாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த அலுவலகம் திறப்பு குறித்து பொதுகுழுவில் அறிவிக்க அன்புமணி திட்டம் தீட்டிருந்தார். அதன் அடிப்படையில் புது அலுவலகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் ஊடகங்களில் அன்புமணி ராமதாஸ் கோபித்துக் கொண்டு தனி அலுவலகம் துவங்கி விட்டதாக, தவறாக புரிந்து கொண்டு செய்தியினை வெளியிட்டு விட்டனர்.
திடீர் ஆலோசனை பின்னணி என்ன ?
வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அன்புமணியின் திட்டமாக உள்ளதாம். இதற்காக பாமக பலமாக உள்ள 50 தொகுதிகளில் மையப்படுத்தி வேலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்கான யூகங்களை பாமக தலைவர் அன்புமணி வகுத்து வருவதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் பாமகவினர் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று, கும்பகோணத்தில் சாதிவாரி கணக்கெடுத்து நடத்த வேண்டும் என பாமக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் முடிவு செய்திருப்பதால், அதற்கான ஆயத்த பணிகளையும் அன்புமணி இறங்க உள்ளாராம். சமீபத்தில் குறுகிய நாட்களில் திருவண்ணாமலையில் நடந்த விவசாய மாநாடு பாமகவிற்கு, உத்வேகத்தை கொடுத்து இருக்கிறதாம்.
மீண்டும் அமாவாசை சென்டிமென்ட்
நேற்று அமாவாசை என்பதால் முதற்கட்ட ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறாராம். ஒவ்வொரு நிர்வாகியிடம் கட்சிக்கு வேலை செய்பவர்கள் பதவிக்கு வர வேண்டும், நானே நேரடியாக வருகிறேன் களத்தை தயார் படுத்துங்கள், 10.5 சதவீதம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் திமுகவிற்கு 2026 தேர்தலில் பாடம் கற்றுத் தர வேண்டும் என உத்வேகத்துடன் அன்புமணி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் அம்மாவாசை சென்டிமென்ட் வேலை செய்துள்ள நிலையில், அன்புமணியின் திட்டம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.